tamilnadu epaper

சம்மர் கேம்ப்

சம்மர் கேம்ப்


 முத்தரசன் காலையிலிருந்தே ஒரே உற்சாகமாக இருந்தார்..பிறகு, அவர் 8 வயது பேரனை அழைத்துக்கொண்டு மருமகள் வருகிறாள் சென்னையிலிருந்து..


இந்த முறைதான் லீவுக்கு தங்குவது போல் பேரன்‌ வருகிறான்..அவர் மனைவி லதாவும் இரண்டு நாள் முன்னரே..அவர்கள் தங்க ரூம் சுத்தம் செய்வது ..போட்டிருந்த ஏசியை சர்வீஸ் பண்ணி வைப்பது..பெட்ஷீட் கர்ட்டன்‌ எல்லாம் மாற்றி, அவனுக்கு பிடித்த பலகாரங்களை தன் வீசிங்கையும் பொருட்படுத்தாமல் முறுக்கு, சீடை, பாதுஷா எல்லாம் செய்து வைத்து பேரன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்..


 பையன் சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்..மருமகளும் நல்ல வேலையில் இருக்கிறாள்..இந்த வருடம் லீவுக்கு பையனை வந்து அங்கு 10 நாள் தங்குவது போல மனைவியுடன் அனுப்புகிறேன் என்று பையனிடமிருந்து போன் வந்ததிலிருந்து இருவர் மனதிலும் உற்சாகம் கரை புரண்டது..


சென்னை வெயிலுக்கு பயந்து கோடையில் மகன் கூப்பிட்டாலும் இருவரும் போவதில்லை..


வாடகை காரில் வந்து இறங்கியவர்களை ஆசையுடன் வரவேற்றனர் இருவரும்..குசலமெல்லாம் விசாரித்து முடிய ..சற்று ஓய்வெடுக்க சென்றாள் மருமகள்..


பேரனிடம் ஸ்கூல் விஷயங்கள்..வீட்டு விஷயங்கள் எல்லாம் பேசி ..பேரன் சிரீஷ் தன் தாயாரோடு குளித்து தயாராகி வெளியே வந்தான்..


காலை உணவு முடித்து சில நிமிடங்களில் ..வாசலில் கார் சத்தம் கேட்க..

" சிரீஷ்க்கு, சம்மர் கிளாஸ் விசாரிச்சிட்டு வரோம்..மதியம் சாப்பாடு வேணாம்..மாலை ஆகிடும்" என்று கிளம்பி போனார்கள்..காலையில் அவர்களை வீட்டில் விட்ட கார்தான் அது..அப்பவே சொல்லியிருப்பாள் போலும் என்று நினைத்தனர்..


 7.30 மணி தாண்டி இருவரும் வந்து சேர்ந்தனர்..


 நிறைய வெப்சைட் தேடி..இந்த சம்மர் கிளாசில் சேர்த்ததாய் சொன்னாள் மருமகள்..


" இன்று ஒருநாள் ஃப்ரீ கோச்சிங்..கூடவே இருந்து பார்த்துட்டு திருப்தினா முழு ஃபீஸ் கட்டலாம்னு சாய்ஸ் கொடுத்திருந்தாங்க..

நான் ஃபுல் ஃபீஸ் கட்டிட்டேன்..பக்கத்து ஸ்டேட்லேருந்து கூட வந்து இங்க சம்மர் கிளாஸ்ல சேர்த்திருக்காங்க..


"என்னம்மா சொல்லிக்கொடுப்பாங்க..சென்னையில இல்லாம இந்த கிராமத்துலங்கிற..!"


பிள்ளைங்க டவுன்லியே இருந்து ஒரிஜினல் லைஃபே தெரியாம போயிடுதுல்ல..


இங்க விவசாயம் செய்றத நேர்ல பாத்து அவங்க நேரிடையாவே ..நாத்து நடுறது..வாய்க்கா வெட்டுறதுன்னு செய்வாங்க..அப்போ தானா , மண்ணோட மகத்துவம் புரியும்..


வாய்க்கால்ல நீச்சல் பழக்கி விடுறாங்க..அப்புறம் குளம்..ஆனா நல்ல பாதுகாப்புடன் கேரண்டியா சொல்லிக்குடுக்குறாங்க..வெளியில போகும்போது ஆபத்துனா அவங்க தப்பிச்சிட முடியும்ல..பிறகு நல்ல இயற்கையா விளைந்த தானியங்கள்ல, மண் பாத்திரங்களில் பிரிப்பேர் பண்ண சுத்தமான சத்தான சாப்பாடு..இரவு தங்க இளைப்பாற அழகா பெரிய‌ குடில்கள்..நல்ல இயற்கை காற்றுல இருந்தா அவங்க ஆரோக்கியம் மேம்படும்..உங்க பையன்தான் ஸ்டே அங்க வேண்டாம்..வந்து எங்க வீட்டுல தங்கட்டும்னு கன்டிஷனா சொல்லிட்டார்..அந்த கார் டிரைவர் தினமும் இரவு 8 மணிக்கு இங்க டிராப் பண்ணிடுவாரு..காலையில் 7 மணிக்கு வந்து அழைச்சி போவாரு..பத்ரமா பாத்துக்குங்க அவனை..நான் இன்னைக்கு ஊருக்கு போயிட்டு,10 நாள் கழிச்சி வந்து உங்க பேரனை கூப்புட வரேன்..


உங்ககிட்ட பேரனை விடுறதேயில்லனு இனிமே யார்ட்டயும்‌ குறை சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.."


"சரிடா..சிரீஷ்..தாத்தா பாட்டிக்கூட சந்தோஷமா 10 நாள் என்ஜாய் பண்ணு ..அம்மா வரட்டா ..பை!" னு காரில் கிளம்பிய மருமகளை வழியனுப்பி திரும்பி வீட்டுக்குள் வர..சிரீஷ் களைப்பில் அப்படியே சேரில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டிருதான்..


பையன்கிட்டேயிருந்து ஃபோன் வந்தது..

 "அப்பா..சந்தோஷமா.?.உங்க கூட பேரன் தனியா தங்கபோறான்..திருப்திதான.."


"ரொம்ப திருப்தி பா.சந்தோஷம்..இப்ப‌கிளாஸ்ல சொல்லித்தரதெல்லாம், நம்ம வீட்டுல நீயும் அனுபவிச்சிதானப்பா வளர்ந்த..பிறகு எதுக்கு பணம் கட்டி அவன் கத்துக்கனும்னுதான் புரியல..?"


"ஆமாம்பா..ஆனா அப்ப நீங்க இளமையா இருந்தீங்க.இப்ப உங்களால அதெல்லாம் முடியாதுல்லபா..அதான்..!"


" சரிப்பா..நைட்டாவது எங்ககூட பேரன் தனியா தங்குறான..சந்தோஷம்பா.."


" காலையில கார் டைமுக்கு அவனை ரெடி பண்ணி விட்டுடுங்க பா..அங்க போய் சத்தான சாப்பாடு சாப்பிட்டு பழகட்டும்..!"


"சரிப்பா ! சந்தோஷம்", என்று செல்ஃபோனை ஸ்பீக்கரிலிருந்ததை கட் பண்ணியவர் மனைவியை பார்த்த பார்வையில் ..இருந்தது..பரிதாபமா..பச்சாதாபமா..!


முற்றும்..

தஞ்சை உமாதேவி சேகர்..