tamilnadu epaper

சாலை

சாலை


இருமருங்கிலும் மரங்கள் சூழ

காற்றின் ஈரவாடையோடு

நீண்டு நெளிந்துகிடக்கும் 

இந்த சாலை

மாலை மங்கிய

இரவுப்போர்வையில்

தனியாய் நடக்கையில் கிளைவிரிந்து

பேயாட்டம்போடும்..


இருள்கவ்விய மரங்களிடையே

அன்றைக்கெல்லாம் பேரச்சமூட்டும்..


எல்லைக்கருப்பராயனை வேண்டிக்கொண்டு

பின்னால் நெருங்கிவரும்

பிடாரிக்கு பயந்து

இரட்டைக்கிடாய் வெட்டுவதாய் நேந்துகொண்டதும்..


குலைநடுங்கும் பயணத்தை தாண்டியபின்

நேர்த்திக்கடன் அர்த்தமற்றதாய்

யோசனையில் வந்தபோதும்

கருப்பண்ணசாமி கோபம் குலநாசமென்று

அடுத்த நோம்புக்கே

கிடா வெட்டி பொங்கலிட்ட கதை

இன்றைக்கு நினைத்தால்

வேடிக்கையாயிருக்கிறது..


வெயில் சுட்டெரிக்க

ஒதுங்கக்கூட ஒரு மரமில்லை

இன்றைக்கெல்லாம் அதே சாலையில்..


விரிவுபடுத்தப்பட்ட மண்சாலை

முகம்மாறி நெடுக தார்பூசிக்கிடக்கிறது..


விடியவிடிய எரியும் விளக்குகளில்

ஒளிந்துகிடக்கிறது

பின்னால் துரத்திய பேய்கள்..


இப்போதெல்லாம்

ரத்தவாடை மறந்துபோய்

அகிம்சை பூசியிருந்தார்

எல்லையோர கருப்பண்ணசாமி..!


-ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்