tamilnadu epaper

ஜாடிக்கேத்த மூடி

ஜாடிக்கேத்த மூடி

தன் காதலன் கொடுத்த ஸ்லோ பாய்சனை பாலில் கலந்து கணவன் அறைக்கு எடுத்துச் சென்றாள் சுஜாதா.

 

      படுக்கையில் படுத்தவாறு ஏதோவொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த தேவநாதன் அவள் தந்த பாலை வாங்கி வாய் அருகே கொண்டு சென்று நிறுத்தி, "சுஜா.. இப்பதான் ஞாபகம் வருது உனக்காக நான் ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்'.

 

   "என்னவாம்?". எரிச்சலாய்க் கேட்டாள்.

 

    "என்னோட சட்டைப் பாக்கெட்டில் இருக்கு!... போ... போய் எடுத்துட்டு வா!".

 

    எடுத்து வந்தவள், "இது என்னங்க?... சாக்லேட் மாதிரி இருக்கு!". கேட்டாள்

 

    "மாதிரி என்ன?.. சாக்லேட்டே தான்!. அதுவும் ஃபாரின் சாக்லேட்!... இன்னிக்கு போர்டு மீட்டிங்கிற்காக ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போயிருந்தோம்!.. அங்கே கீழே இருந்த ஒரு ஷாப்ல இதைப் பார்த்தேன்!... உனக்குத்தான் சாக்லேட் உசுராச்சே?. அதான் வாங்கிட்டு வந்தேன்".

 

    "சரி... சரி... நீங்க பாலை குடிங்க!" அவள் அவசரப்பட.

 

    "நோ!.. லேடீஸ் ஃபர்ஸ்ட்!.. நீ முதல்ல சாக்லேட் சாப்பிடு அப்புறம் நான் பாலை குடிக்கிறேன்!"

 

   "வந்து.... நான் நாளைக்கு சாப்பிடுறேனே?'.

 

    "நோ!.. இப்பவே சாப்பிட்டாகணும்!..

இது ஒரு மாதிரியான சாக்லேட்டாம்!.... சாப்பிட்டா ரொமான்ஸ் மூடு கிளம்புமாம்... சாப்பிடு சாப்பிடு!" கண்ணடித்துச் சொன்னான்.

 

   "க்கும்... ரொமான்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்?" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு அவனுக்காக வேண்டி அந்தச் சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டாள்.

 

      சில நிமிடங்களில் தொண்டையிலிருந்து அடிவயிறு வரை தீயாய் எரிய, கத்தினாள். 

 

   "என்னங்க... என்ன கர்மத்தைக் கொடுத்தீங்க?....எரிச்சல் தாங்க முடியல" கதறினாள்.

 

   " சுஜா.... நீ எதிலேயும் ஸ்லோ.. அதான் ஸ்லோ பாய்சன் கொடுத்தே... நான்தான் எதிலேயும் ஃபாஸ்ட் ஆச்சே?. அதான் உடனடியா வேலை செய்ற சைனைட் சாக்லேட் கொடுத்தேன்!... குட் பை!... போயிட்டு வா!... இல்லை...இல்லை.. வராதே!"

 

முற்றும்

---++------

முகில் தினகரன், கோவை