tamilnadu epaper

டிரம்ப் உடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி: அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

டிரம்ப் உடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி: அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

வாஷிங்டன், மார்ச் 1


வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டார்.


ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதி உதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.


இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.


காரசார விவாதம்


ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பில் டிரம்ப் பொறுமை இழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். டிரம்ப் தனது குரலை உயர்த்தி, நீங்கள் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போகிறீர்கள். இந்த தேசத்தை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்று ஆவேசமாகக் கூறினார்.


இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து டிரம்ப் பேசியது பதட்டத்தை அதிகரித்தது.


பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.


இதை கேட்டு கோபமடைந்த ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே..


ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும் என்று கூறினார்.


இதற்கு பதிலளித்த டிரம்ப், "உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான். இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார்.


இதற்கு கோபமாக பதில் அளித்த ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம். அதற்கு நன்றி என்று அவர் கூறினார்.


பேச்சுவார்த்தை


தோல்வி


அவர் பேச்சில் கடுப்பான டிரம்ப், "அப்படி எல்லாம் பேசாதீர்கள். நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த அதிபர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். நாங்கள் இருப்பதால் ஏதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை என்று காட்டமாக கூறினார்.


இதற்கிடையில் டிரம்ப் ஜெலன்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்திக்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.


இந்நிலையில் வெள்ளை மாளிகை அறிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உக்ரைன் அதிபர், அவருடன் வந்த குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறியுள்ளது.


பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டிரம்ப், உக்ரைன் அதிபர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால், இந்த விருந்து நடைபெறவில்லை.


அமைதிக்கு தயாரில்லை


இதனைத்தொடந்து பேச்சு வார்த்தை குறித்து டிரம்ப் தனது அறிக்கையில், வெள்ளை மாளிகையில் மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம் என்றும், இருப்பினும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம் என்று அதில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ் தனது எக்ஸ் பதிவில், "அமெரிக்காவுக்கு நன்றி, உங்கள் ஆதரவுக்கு நன்றி. டிரம்ப்புக்கும் நன்றி, உக்ரைனுக்குக்கு நியாயமான மற்றும் நிரந்தர அமைதி தேவை, அதற்காக நாங்கள் பாடுபடுவோம்" என்று கூறியிருந்தார்.