விசாகப்பட்டினம்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் மற்றும் பிரேசர் மெக்கர்க் களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென் உயர்ந்தது. இதில் டு பிளெஸ்சிஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. இதில் மெக்கர்க் 8 ரன்னிலும், டு பிளெஸ்சிஸ் 50 ரன்னிலும், அடுத்து வந்த ராகுல் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இந்த மூன்று பேர் விக்கெட்டையும் சியாஷன் அன்சாரி வீழ்த்தினார்.
தொடர்ந்து அபிஷேக் பொரெல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்ட இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இறுதியில் டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சியாஷன் அன்சாரி 3 விக்கெட் வீழ்த்தினார்.