tamilnadu epaper

நீயா? நானா?

நீயா? நானா?


     இன்னும் கொஞ்சம் கேமராவ ரைட்ல திருப்பு.......


       முகத்துல வெளிச்சம் படுற மாதிரி லைட்டிங் செட் பண்ணு....


   ஆங்கில் சரியா வை....


  கார்பெட் கலர் சரியா வருதா? செக் பண்ணிக்கோ....


    தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கும் தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவுக் கூடம்.


     தம்பி! வர்ற விஐபி நிகழ்ச்சி சரியா வரணும்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கிறவரு. எந்தத் தப்பும் இல்லாமல் சரி பார்த்துக்கோங்க.

நாம இவ்வளவு மெனக்கெட்டும் ஏதாவது சரியில்லைன்னா சட்டுனு கோபப்பட்டுப் பேசிடுவாரு. இந்த நிகழ்ச்சி நம்ம டிஆர்பிய அதிகப்படுத்தும்னு எதிர்பார்க்கிறோம்.

அதனால கவனமா வேலை செய்யுங்க. 

என்று இயக்குனர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவருடைய அலைபேசி அழைத்தது. 


    ஐயா வணக்கம்... என்று பணிவாகத் தொடங்கி பேட்டி தருவதற்காக வரக்கூடிய முக்கியப் புள்ளியிடம் போனிலும் பணிவைக் காட்டினார் தயாரிப்பாளர்.

    

         ஐயா வரப்போறாரு.... எல்லாரும் தயாரா இருங்க என்று அங்கு இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.


    அவருடைய பரபரப்பு அனைவரையும் தொற்றிக்கொள்ள ஒளிப்பதிவுக் கூடத்தின் சுவரும் தரையும் கூட பரபரப்பானது. 


  ஒரு வழியாகப் பேட்டி முடிந்தது.


     ஓரளவு திருப்தியாக இருந்ததால் தயாரிப்பாளர் முகத்தில் புன்னகை இருந்தது.


    கொஞ்சம் நிதானமாக அமர்ந்து நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனருடன் பேசிக் கொண்டிருந்தார்.


      டைரக்டர் சார்! கொஞ்சம் நம்ம நிகழ்ச்சியின் டிஆர்பி குறையற மாதிரி இருக்கு. ப்ரைம் டைம் நிகழ்ச்சியிலேயே குறையுதுன்னா நம்ம இன்னும் வித்தியாசமா ஏதாவது பண்ணனும். என்ன செய்யலாம்னு யோசிங்க. ஒரு மீட்டிங் போட்டு முடிவு பண்ணுங்க. மத்தச் சேனல்கள விட நம்ம சேனல் மக்களிடம் பேசப்படறதா இருக்கணும். 


      சார்! நானும் அதைத்தான் யோசிக்கிறேன். என்ன பண்றதுன்னு தெரியல.

டெக்னீசியன்ஸ் கொஞ்சம் கவனமா வேலை செய்யனும் சார். என்ற டைரக்டரை ஒரு பார்வை பார்த்து,

   நீங்க அவங்களக் குறை சொல்லுங்க. அவங்க உங்களைச் சொல்லட்டும். இப்படியே நீயா? நானா? ன்னு பேசிட்டு இருந்தா நிகழ்ச்சிய ஜெயிக்க வைக்கிறது எப்படி? என்று திட்டி விட்டுத் தன் காரில் ஏறிச் சென்றார் தயாரிப்பாளர்.

      

        மறுநாள் காலை,

அந்தத் தனியார் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிறுத்தப்படப் போவதாகத் தலைப்புச் செய்தி 

 அனைத்து ஊடகங்களிலும் காற்றை விட வேகமாகப் பரவியது.


        அதிர்ந்து போன இயக்குனர் உடனடியாகத் தயாரிப்பாளருக்கு போன் செய்தார். 

 

      சார்! நான் உடனே உங்களைப் பாக்கனுமே! எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்? என்று கேட்க,


    இருயா! நீ எதுக்கு மீட் பண்ணக் கேக்கறேன்னு எனக்குத் தெரியும்.

வேகமாப் பரவிட்டு இருக்கிற செய்தியப் பத்தி தானே உனக்குச் சந்தேகம்.


      ஆமா சார். நான் இதைக் கொஞ்சங் கூட எதிர்பார்க்கல.


     என்னோட எத்தனையோ நிகழ்ச்சிகள் டிஆர்பி ல ரேட்டிங் ஏத்திக் கொடுத்திருக்கு. இப்பக் கொஞ்சம் குறையுது அப்படிங்கிறதுனால நிகழ்ச்சிய நிறுத்தனும்னு நினைக்கிறது சரியில்ல.


        நீங்க இதைச் செய்வீங்கன்னு எதிர்பாக்கல. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு என்று டைரக்டர் புலம்ப ஆரம்பித்தார்.

   

    அட இருப்பா.... நான் சொல்ல வர்றத முதல்ல கேளு. நிறுத்தப் போறேன்னு செய்தி தான வந்திருக்கு நிறுத்தலையே!


    சார்! ஒண்ணுமே புரியலையே! 


    ஆமாய்யா உனக்கு எதுவுமே புரியாது. நிகழ்ச்சிக்கு நீ கேட்கும்போது பணம் மட்டும் கொடுத்துட்டே இருக்கணும் என்று எரிந்து விழுந்தார் தயாரிப்பாளர்.


       ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இயக்குனர்.


    இன்னும் இப்படிச் செய்திகள் போட்டோம்னா 

ஏன் நிறுத்துறாங்க? என்னவா இருக்கும்னு? மக்கள் மத்தியில ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கும். என்னவோ இருக்குன்னு மறுபடியும் எல்லாரும் பார்க்க ஆரம்பிப்பாங்க.

டி ஆர் பியும் ரெய்ஸ் ஆகும். இதுவும் ஒரு வகையில விளம்பரம் தான் என்று நமட்டுச் சிரிப்பு சிரித்த தயாரிப்பாளரின் வெற்றிச் சூத்திரம் புரிந்தது இயக்குனருக்கு. 


        ரொம்ப நன்றி சார் என்றவரிடம்,


        நான் செய்ய வேண்டியதைச் செஞ்சிட்டேன். நீ செய்ய வேண்டிய வேலையை சரியாச் செய் என்றபடியே அலை பேசியை வைத்தார்.


     கொஞ்சம் மாத்தி யோசிச்சா எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு கிடைக்கும் என்று புரிந்து கொண்ட இயக்குனர் அடுத்த கட்ட வேலைக்குத் தயாரானார்.


-தமிழ்நிலா