tamilnadu epaper

நேபாளத்தில் கடும் வன்முறை.. முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு

நேபாளத்தில் கடும் வன்முறை.. முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு

காத்மாண்டு:


நேபாளத்தில் மன்னராட்சி முறை கடந்த 2008 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாட்டின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா (வயது 77), காத்மாண்டுவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மன்னராட்சி ஒழிக்கப்பட்டபின் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது. 16 ஆண்டுகளில் 14 அரசாங்கங்கள் உருவாகி உள்ளன. பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.


தலைநகர் காத்மாண்டுவில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை சூறையாடினர்.


வன்முறைகளை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள நேபாள நாடாளுமன்ற கட்டிடம் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ஒரு போராட்டக்காரர் மற்றும் ஒரு செய்தியாளர் ஆகியோர் உயிரிழந்தனர். வன்முறைகளில் ஈடுபட்ட 105 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார்.


வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.


ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.