தாய் மனமே தாய் மனமே...
தவிக்குது இந்த பூ மனமே
கடலையில் ஓடம் போல
கலங்குது என் மனமே
தாய் மனமே தாய் மனமே
தவிக்கும் தனி ஓர் மனமே
காற்றலையில் தீபம் போல
அலையுது என் மனமே
உயிர் சுமந்து பெற்றவளே
உனை மறக்க முடியலையே
ஊர் சுமக்கும் வேளையிலும்
சொல்லி அழ தெரியலையே!
சரணம்:1
ஒரடிதான் நடந்தாலும்...
ஓடி வந்து தூக்கிடுவாய்
ஆறடியில் உன்னையிங்கு
நான் வைப்பதா?
தவறி மண்ணை தின்னாலும்
தட்டி பறித்து அடித்திடுவாய்
தாயே உனை மண்ணிலிட்டு
நான் புதைப்பதா?
கண்ணில் தூசு விழுந்தாலும்
கலங்கிதான் தவிப்பாயே
இன்று இந்த கண்ணை விட்டு
இமை பிரிவதா?
வாய் ருசிக்க சோறாக்கி
வாழ்நாளில் போட்டாயே
இந்நாளில் வாய்க்கரிசி நான்
உனக்கு போடவா?
சரணம் :2
ஒரு கூட்டு கிளியாக...
என்னைதான் வளர்த்தாயே
இந்த கிளி கூடு விட்டு
காடு போவதா?
நாணலோடு விளையாட
நதி தேடி வந்தேனே
அந்த நதியில் தாயே
உனக்கு தலை முழ்கவா?
தேர் போகும் வீதியில்
நீ போவது நியாயமா
இன்று எந்த திருநாளும்
இங்கு இல்லையே?
சிறு துன்பம் என்றாலும்
தாலாட்டு பாடிடுவாய்
இந்த துன்பம் யார் எழுதும்
பாட்டில்தான் தீர்ந்திடுமோ?
சரணம்:3
வானத்து நிலவாக...
வாழ்வில் தான் இருந்தாயே
இன்று என்னை நீயே
இங்கு இருளில் தள்ளவா?
என்னில் பாதியானவளே
என்னை தான் துடிக்க விட்டு
என் ஜீவன் சேர்த்து
எடுத்து நீ செல்வதா?
கொள்ளி நான் வைத்தாலும்
உன் கூடு எரிந்தாலும்
பெற்று எடுத்த பிள்ளைக்
கடன் என்று தீருமோ?
ஒரு கோடி சொந்தங்கள்
உறவாட இருந்தாலும்
உன் போல ஒரு சொந்தம்
உலகில்தான் வாய்த்திடுமோ?
-கவிஞர்
ஜெ.ம.புதுயுகம்
பண்ணந்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
குறிப்பு
(தாய் இறந்த சோகத்தில்
மகன் பாடும் பாடல்)