மணி வழக்கம் போல மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். எட்டாவது வரை படித்திருந்த மணிக்கு அதற்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை ஒத்துவரவில்லை. மணிக்கு படிப்பின் மீது ஆர்வமிருந்தும் அவனைப் படிக்க வைக்க ஆளில்லை.
மணியின் பழைய பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு "கட்" அடித்து விட்டு ஏரி, வயல் காடு என்று சுற்றித்திரிவது வழக்கம்.
அப்படி வீணாகப் பொழுதைக் கழித்து விட்டு தங்களின் முன்னாள் பள்ளி மாணவனான மணியைப் பார்த்து,
"டேய் மணி! உனக்குத் தாண்டா ஜாலியான வாழ்க்கை!" என்றனர்.
அதற்கு மணி, "டேய்!
உங்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு உள்ளது. அதைக் கெடுத்துக் கொள்ளாதீங்கடா!" என்று அறிவுறுத்தியும்
அவர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் மணி போல
ஊரைச் சுற்றுவதில் அக்கறை செலுத்தினர்.
ஊரில் ஆடு, மாடு இரண்டையும் சேர்த்து பார்ப்பது கடினம். அதிலும் வயலில் கதிர் விளைந்துஇருக்கும் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்காமல் போய்விட்டாலும் பஞ்சாயத்து வரை சென்று அபராதமும், பெரிய பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டும்.
இப்படி ஒட்டுமொத்த ஊர் ஆடு மாடுகளையும் மேய்க்க குத்தகை எடுத்து சரியாகச் செய்து வந்தான் மணி.
ஒருநாள் மணி மிகவும் சோகமாக இருந்தான். எப்போதும் பாட்டு பாடிக்கொண்டும், நிழலில் சிறிது நேரம் அமர்ந்தாலும் அவனுடைய கண்கள் எல்லாம் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் மீது இருந்தபடியே இருப்பான்.
அன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கி விட்டான். அப்போது ஒரு காட்டு நாய் ஒரு ஆட்டைக் கடித்துவிட ஆடு கத்திய சப்தம் கேட்டு கண்விழித்தான்.
ஆடு கடிபட்டதைப் பார்த்ததும் குதித்து ஓடி வருவதற்குள் நாய் ஓடியிருந்தது. காயப்பட்ட ஆட்டுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினாலும் ஆட்டுக்கு சொந்தக்காரர் அவனிடம் சண்டை போட்டு நஷ்ட ஈடு கேட்டு
வாக்குவாதம் செய்தார்.
இதனால் மனமுடைந்த மணி அரட்டை அடிக்க வந்த தன் பள்ளி நண்பர்களிடம் வருத்தப்பட்டு கூறினான்.
ஆடு மேய்ப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கிறதா? என நண்பர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"இது பரவாயில்லை! போன அறுவடைக்கு நான் எவ்வளவு கன்ட்ரோல் செய்தும் அடங்காத மாடு ஒரு வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய வயலின் உரிமையாளர் அருவாளை தூக்கி எறிய அது சரியாக காளை மாட்டின் காலை பதம் பார்த்தது.
இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் நிலத்துக்காரருக்கும், காளை மாடு வளர்த்தவருக்கும் ஏற்கனவே பழைய பகை.
இரண்டு தரப்பும் மோதிக்கொள்ள ஊரே இரண்டுபட்டு என்னையும் தாக்கி விட்டனர்"
என்று மணி சொல்லவும்
நண்பர்கள் இந்த தொல்லையெல்லாம் பள்ளிக்கூடம் செல்லும் நமக்கு இல்லை என மனதுக்குள் ஆறுதல் பட ஆரம்பித்தனர்.
சில காலம் கழித்து எல்லா வயல்களிலும் அறுவடை முடிந்து விட்டிருந்தது. ஆடு, மாடுகள் அவுத்து விடப்பட்டு இஷ்டத்துக்கு புல்களை மேய ஆரம்பித்தது.
இனிமேல் மணிக்கு ரெஸ்ட் தான்! நல்லா ஜாலியாக இருப்பான் என அவனைக் காணாத தால் நண்பர்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
ஆனாலும் ஊரிலும் மணியை எங்குமே பார்க்க முடியவில்லை.
மணிக்கு என்னாச்சு என்று ஊருக்குள் சென்று அவன் அப்பாவிடம் கேட்டனர்.
" மணி ஏதோ பரிட்சை எழுதப்போறேன்னு டவுனுக்குப் போயிருக்கான்பா! ராத்திரி பூராவும் கண் முழிச்சு ஏதாவது படிச்சுகிட்டே இருப்பான்பா! ஆடு மேய்த்த மொத்த பணத்தையும் எடுத்துக் கிட்டு புத்தகம் வாங்கறது, பேனா வாங்கறது, புத்தகப் பை வாங்கறதுன்னு அலைஞ்சான்.
எங்ககிட்ட காசு பணம் கேட்டு சிரமப்படுத்தாம அவன் யார் கிட்டயோ கேட்டு படிப்பைத் தொடர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கான் தம்பி!" என்று மணியின் அப்பா சொல்லி விட்டுச் சென்றார்.
நால்வரும்,"ஃபிரென்ட்ஸ்
மணிக்கு கல்வியோட அருமை தெரிந்த அளவுக்கு நமக்கு தெரியாமப் போச்சேடா!
நாம இனியும் பள்ளிக்கூடம் போகலைனா மாடு மேய்க்கக் கூட நாமெல்லாம் லாயக்கு பட மாட்டோம்! ஏன்னா
மாடு மேய்க்கிறது எவ்வளவு கஷ்டம் னு நாமலே கண்கூடாகப் பார்த்தோம்! இப்போதிருந்து நாம் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போனாலே
நமக்கு அட்டனென்ஸ் சரியாக இருக்கும். அட்டனென்ஸ் இல்லைன்னா முழு ஆண்டு பரிட்சை எழுத முடியாது!" என்று தன் தவறை உணர்ந்து அவரவர் வகுப்புக்கு செல்ல ஆரம்பித்தனர்.
-பிரபாகர்சுப்பையா,
மதுரை- 625012.