tamilnadu epaper

பழசுதான் பழுதல்ல

பழசுதான் பழுதல்ல


 வீட்டிலிருந்து நடந்தே பேருந்து நிறுத்தத்திற்குக் கிளம்பி வந்தான் விஜயன். முக்கியமான ஒரு நிகழ்வு. தூரத்துச் சொந்தம். அதற்கு முன்னரே அன்புநாதன் நட்புக்குடும்பம். பெண்ணுக்கு நிச்சயதார்த்தம். சொந்தத்தில் இல்லை. காதல். பெற்றோர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தங்கள் வாழ்வைத் தங்களுக்கு வாழத்தெரியும் என்கிற கணக்கில் இளம் பிள்ளைகள் இப்போது காதல் கொள்கிறார்கள். பெற்றோர்களுக்கு இன்றைய வாழ்வு எதுவும் தெரியாது. அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. காதல் திருமணம் முடிந்து நடைமுறையில் வாழத் தொடங்குகிறபோதுதான் வாழ்க்கையின் நுட்பம் அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

         அன்புநாதன் பிள்ளைகளுக்கு எல்லா உரிமைகளும் கொடுத்து, அவர்களின் உணர்வுகளையும் மதித்து நடந்தார். அதைப் பிள்ளைகள் கூடுதல் உரிமையாக எடுத்துக்கொண்டு மீறினார்கள். அன்புநாதன் பெண் ராகினி அப்படித்தான். நேரடியாக நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றபோது அன்புநாதன் ஒன்றைச் சொல்ல முயன்றார்.

 அப்பா வேண்டாம்.. எந்தக் கருத்தும் சொல்லவேண்டாம் எங்களுக்குத் தெரிந்துதான் எல்லாவற்றையும் முடிவெடுத்திருக்கிறோம் என்றாள்.

 அன்புநாதன் சொன்னார்.. நான் எதையும் சொல்ல வரவில்லை. உன் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை உனக்குத்தான் அதிகப் பங்கிருக்கிறது. அதில் நான் தலையிடவில்லை. நாளைக்கு உனக்கான வாழ்க்கையில் எதிலும் தலையிடமாட்டேன்.. உன்னால் இயலவில்லை என்று ஒருமுறைக்கு நான்கு முறை வற்புறுத்திச் சொன்னால் மட்டுமே நான் வருவேன். ஆனால் எப்போதும் உன் வாழ்வைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பேன் என்றார்.

 இந்தப் பேச்சு ராகினிக்குப் பிடித்திருந்தது.

 தன்னுடைய பெண்ணை நினைத்துக்கொண்டே நடந்தான் விஜயன். அவனுடைய பெண் தற்போது பத்தாம் வகுப்புப் படிக்கிறாள்.

 நகரத்திற்குப் பேருந்து எதுவும் வரவில்லை. சற்று நேரம் காத்திருந்தான். பத்தரை மணி வெயில் சுட ஆரம்பித்திருந்தது.

 நகரப் பேருந்து ஒன்று வந்தது. வழக்கமாகப் பேருந்து நிற்குமிடத்தில் நிற்காமல் சற்றுத் தள்ளிப்போக லேசாக ஓடினான் விஜயன்.

 ஓடும்போது சட்டென்று வலதுகால் செருப்பு அறுந்தது. கட்டைவிரல் விடும் பகுதியின் வளையம் அறுந்துபோயிருந்தது. சே.. என்றான். புதுச்செருப்பு. எப்படி அதற்குள் அறுந்துபோகும்?

 காசு வாங்குகிற அளவுக்குத் தரமான பொருளைத் தரவேண்டும் என்கிற எண்ணம் இல்லாத போக்குதாம் இன்றைக்குப் பெருகிக்கிடக்கிறது.

 அந்தப் பேருந்தைவிட்டுவிட்டுத் திரும்பியவன் கண்களில் பட்டது. நான்கு சிறிய குச்சிகளின் மேல் போர்த்தப்பட்ட அரிசி சாக்கின் கீழ் உட்கார்ந்து செருப்புத் தைத்துக்கொண்டிருந்தவரை. நிறுத்தத்திற்கு அருகில் உள்ள தொலைபேசிக் கம்பத்தின் அடியில் உட்கார்ந்திருந்தார். 

 இப்போது வேறு வழியில்லை. அவரிடத்துப் போனான். 

 ஐயா.. வாங்க.. என்ன? என்றார்.

 செருப்பு அறுந்துபோச்சு… 

 கொண்டாங்க ஐயா.. தச்சுக் கொடுக்கிறேன் என்று வாங்கி… அறுந்துபோனபகுதியைப் பார்த்துப் பின் அறுந்த பகுதியை உள்ளே செருகி அதைத் தைத்தார. பின் தைத்த நூல் தெரியாமல் இருக்க. அதன்மேல் பாலிஷ்ஷைத் தடவினார். தைத்த அடையாளமே தெரியாமல் இருந்தது.

 போட்டுப் பார்த்தான் விஜயன்.

 எவ்வளவு ஐயா?

 பத்து ரூபா கொடுங்க ஐயா என்றார்.

 விஜயன் ஆச்சயர்யமானான்.. பத்து ரூபா போதுமா? என்றான்.

 போதுங்கய்யா.. இப்பல்லாம் யாருங்க ஐயா.. தைக்கிறதுக்கு வர்றாங்க.. எல்லாம் பழச மறந்துட்டாங்க.. லேசா அறுந்துட்டாக்கூட உடனே தூக்கிப்போட்டுட்டுப் புதுசு வாங்கிடறாங்க.. இப்பப் பாருங்க.. அறுந்தது தெரியாம தச்சுக் கொடுத்திருக்கேன்.. இதைப் போட்டுக்கக்கூடாதா? எத்தனை விலையா இருந்தாலும்.. அறுந்துட்டா அது பழசுன்னு நினைக்கறாங்க.. நான் தச்சதுக்குப் பத்து ரூவா போதும்.. காலை எட்டுமணிலேர்ந்து உக்காந்திருக்கேன்.. இன்னிக்கு முதல் போனி நீங்கதான்.. பசிக்குது.. நீங்க கொடுத்தது போதும்.. ஒரு டீ குடிச்சிடுவேன்.. 

 விஜயனுக்கு என்னவோ போலாகிவிட்டது. மேலும் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவரிடத்தில் நீட்டினான்.. ஐயா.. வச்சுக்கங்க.. டிபன் வாங்கிச் சாப்பிடுங்க.. வெயில்ல பசியோட உக்காந்திருக்காதீங்க..

 வேண்டாம் ஐயா.. பாத்தீங்களா.. பிச்சை வாங்கறமாதிரி இது.. வேண்டாம்.. உங்கள மாதிரி ஆளுங்க வருவாங்க.. பாலிஷ் போட.. செருப்பு தைக்க.. இன்னிக்குச் சாப்பாட்டுக்குத் தேறிடும்.. பழய ஆளு நானு.. கொஞ்சம் ரோஷக்காரங்க ஐயா.. உழைச்சுத்தான் சாப்பிடுவேன்னு பிடிவாதம் பிடிக்கற ஆளு.. இந்த இடத்துலதான் உக்காந்திருக்கேன். நாற்பது வருஷத் தொழிலு இது. போயிட்டு வாங்க.. ஆனா ஒன்னுங்க ஐயா.. பழச யாரும் மறக்கக்கூடாது.. பழசுதான் நிக்கும்.. 

 விஜயனுக்குத் தன்னுடைய பெண் நினைவுக்கு வந்தது. நினைத்துக்கொண்டே நிற்கையில் நகரப் பேருந்து வந்தது. ஏறிக்கொண்டான்.


-ஹரணி,

தஞ்சாவூர்.