சிறியவர்களாகவே இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றும் அளவிற்கு விளையாடிய விளையாட்டுக்கள்தான் எத்தனை! எத்தனை!
இந்த தாயம் விளையாட்டும் ஒன்று. சதுர வடிவில் கட்டம் போட்டு, அதன் உள்ளே ஏழு ஏழு அல்லது ஒன்பது ஒன்பது என்று இரண்டு பக்கமும் கோடுகள் போட்டு அதில் வெளிப்பக்கம் மத்தியிலும், உள்பக்கம் மூலையிலும் பெருக்கல் குறி போல் போட்டு விட்டால் அது மலை ஆகும்.
இப்போது விளையாட்டுக்கு வருவோம். நான்கு பேர் அல்லது இரண்டு பேர் ஆடவேண்டும். தலா ஆறு காய்ன் (புளியங்கொட்டை, சிறு கற்கள், பாசி மணிகள், பெரிய வகை தானியங்கள்) என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வைத்துக்கொள்வார்கள்.
தாயக்கட்டை என்று அநேகமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும். இரண்டு கட்டைகள். மூன்று, இரண்டு, ஒன்று என்று மூன்று பக்கமும் ஒரு பக்கம் வெற்றிடமாகவும் இருக்கும்.
இரண்டையும் சேர்த்து சாமியை வேண்டிக்கொண்டு உருட்டுவார்கள். இரண்டும் சேரும்போது ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு என்று காண்பிக்கும்.
இரண்டும் வெற்றிடம் என்றால் பன்னிரண்டு எனப்படும். ஒன்று விழுந்தால் மட்டும் ஒவ்வொரு காயாக அவரவர் அமர்ந்திருக்கும் பக்கம் ஆட்டம் ஆரம்பிக்கும்.
இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக விழும் எண்ணிற்கு தகுந்தாற்போல் காயை நகர்த்த வேண்டும்.
மலையில் இருந்தால் வெட்டு கிடையாது. ஆனால் மற்ற இடத்தில் இரண்டு பேரும் காய் வைக்க முடியாது. இரண்டாவதாக வருபவர் முதல் நபரின் காயை வெளியே எடுத்து விடுவார்கள்.
ஒரு ரவுண்டு முடிந்தாலும் உள்பக்கம் போவதற்கு அடுத்தவர் காயை வெட்டி வெளியில் எடுத்திருக்க வேண்டும்.
சாமி பேரை சொல்லி இரண்டு வேணும், ஐந்து வேணும் என்று கேட்டு கேட்டு ஆடுவார்கள். அடுத்தவரை துரத்தி துரத்தி வெளியில் தள்ளி மீண்டும் தாயம் (ஒன்று) விழும்போது உள்ளே வந்து என கண்ணிற்கும் மனதிற்கும் சுறுசுறுப்பை தரும்.
அடிக்கடி ஆடுபவர்களுக்கு எந்த நம்பர் விழுந்தால் காய் எங்கு வருமென்று தெரியும். சிரிப்பும் பரபரப்புமாய் த்ரில்லிங்காக இருக்கும் ஒரு அருமையான விளொயாட்டு. மூளைக்கும் அதிக சுறுசுறுப்பை தரும்.
இரண்டு விதமாக விளையாடுவர். சதுர வடிவிலும், கூட்டல் வடிவிலும் கட்டங்கள் போட்டு விளையாடுவார்கள்.
விடுமுறைக்கு அத்தை மாமா வீட்டிற்கு சென்று விளையாடும் விளையாட்டுகளில் 'தாயம் பாஸ்' ஒரு அற்புத விளையாட்டு.
தரையில் சாக் பீஸ் கொண்டு வரைந்தும் விளையாடுவார்கள்.
நீங்களும் முயற்சிக்கலாமே!
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்