tamilnadu epaper

பாட்டி வீடு

பாட்டி வீடு

விடுமுறை 

வந்தாலே

பாட்டி வீட்டுக்கு பறக்கும்

பட்டாம்பூச்சியாவோம்..


நாங்கள் 

போனதும்

வாரி அணைத்துக்

கொள்ளும்

பாட்டி-தாத்தா

அன்பிற்கு

பூமியின் ஆரமும்

ஈடாகுமா..?


மாமியின்

இட்டலி சாம்பாரின்

ருசி 

அடிநாக்கில்

இன்னும்

முகாமிட்டிருக்கிறது..


தாத்தாவின்

காசுக்கு

ஒற்றைக் கால்

தவமிருக்கும்

கொகக்காவோம்.. 


மாமா வேலைக்கு 

போய் வெயிலில்

வீட்டுக்கு வருகையில்

எங்கள் கண்ணெல்லாம்

அவர் வாங்கி வரும்

பையில் இருக்கும்..


பாட்ஷா 

பட இடைவெளியில்

நான் கூட்டத்தில் தொலைந்து

மீண்டும் கிடைத்த

ஐஸ்கிரீம் நினைவுகள்..


பக்கமிருக்கும்

அத்தை வீடு

நாங்கள் தங்கும்

சொர்க்க வீடு..


மாமா வாங்கிக் கொடுக்கும்

புதுத்துணியின்

மடிப்புகளில்

அன்பின் வாசனை

மடியாமல்

இருக்கும்..


மீண்டும்

வீட்டுக்கு வர

கடைசி பேருந்து

ஏறி அமர்ந்து

பேருந்து முன்னோக்கி நகர

மனம் மாமா

வீட்டைச் சுற்றி

பின்னோக்கி 

வட்டமடிக்க

ஆரம்பிக்கும்..


-ந.வீரா

திமிரி