tamilnadu epaper

பாபநாசம் கோவிலில் கும்பாபிஷேகம்

பாபநாசம் கோவிலில் கும்பாபிஷேகம்

பாபநாசம், மே 5

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருள்தரும் உலகம்மை சமேத பாபநாசர் திருக்கோயில் ம காகும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம் செய்தனர்.


 நெல்லை மாவட்டம், பொதிகை மலை அடிவாரத்தில் தாமிரபரணி நதியின் மேல் கரையில் பாபநாசம் அருள் தரும் உலகம்மை சமேத பாபநாச சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சுவாமி பாபநாசர் அகத்தியர் அவர் மனைவி லோபாமுத்திரைக்கு கைலாயமலையில் நடைபெற்ற சிவன், பார்வதி திருமணகாட்சியை காண அருளியதும் நவ கைலாயங்களில் முதல் தலமாக புராண சிறப்பு பெற்று விளங்குகிறது.


இந்த கோயிலில் கடந்த 2005 ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 20 ஆண்டுகள் ஆன நிலையில் பக்தர்கள் குடமுழுக்கு நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் பாலாலயம் நடந்தது. அதனை தொடா்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் திருப்பணிகள் விரைந்து நடைபெற்று முடிவடைந்தன. 


இந்நிலையில் ஏப்ரல் 27 ம் தேதி அதிகாலை கோயிலில் மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை களுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. கடந்த 1 ம் தேதி மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கின. 


இதை தொடா்ந்து கடந்த 3 நாட்களாக காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளிலும் கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான நேற்று (மே 4) அதிகாலை 6 ம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு கும்பம் எழுந்தருளல் நடந்தது. இதன் பின்னர், காலை 7.30 - 8.30க்குள் மூலஸ்தான விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.