tamilnadu epaper

புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளை - 5 பேர் கைது

புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளை - 5 பேர் கைது

புதுச்சேரி:


புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.


இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.


போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

 

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.