tamilnadu epaper

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு

கொச்சி:

புலிப்பல் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

கேரள திரையுலகின் முக்கிய பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். அந்த வகையில், கஞ்சா வைத்திருந்ததாக பிரபல இளம் ராப் பாடகர் வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட பாடகர் வேடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் மீண்டும் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினில் புலிப்பல்லை டாலராக அணிந்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைதானார். அவர் மீது வனத்துறையினர் வழக்கும் பதிவு செய்தனர்.

 


இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘இலங்கையைச் சேர்ந்த தனது நண்பர் தனக்கு அதனை பரிசாக கொடுத்ததாகவும், அது விலங்கின் பல் என்பது எனக்கு தெரியாது,’ என்று கூறியிருந்தார்.



இந்த நிலையில், வேடனுக்கு ஜாமின் வழங்கி பெரும்பாவூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவரை ஜாமினில் விடுவிக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.



மேலும், வேடன் அணிந்திருந்த டாலர் உண்மையில் புலி பல்லா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.