செண்பகம் சொல்ல.
"அய்ய... பூரிக்கிழங்கு செய்யறதுன்னா மாவு வாங்கணும், உருளைக்கிழங்கு வாங்கணும், எண்ணெய் வாங்கணும்... ம்ஹும்... என்கிட்ட காசு" />
குழந்தைக ரெண்டும் இன்னைக்கு பூரிக் கிழங்கு செய்யச் சொல்லி அடம்பிடிக்குதுக"
செண்பகம் சொல்ல.
"அய்ய... பூரிக்கிழங்கு செய்யறதுன்னா மாவு வாங்கணும், உருளைக்கிழங்கு வாங்கணும், எண்ணெய் வாங்கணும்... ம்ஹும்... என்கிட்ட காசு இல்லை சாமி" கைவிரித்தான் மாரி.
"அதான் உண்டியல்ல நிறைய இருக்கே... அதிலிருந்து எடுங்க!".
"மூச்!... அது குலதெய்வம் கோயிலுக்குப் போறதுக்காக சேர்த்து வெச்சிருக்கிற காசு!" கோபமாய்ச் சொன்னான் மாரி.
முனகியவாறே நகர்ந்தாள் செண்பகம்.
இரண்டு தினங்களுக்குப் பிறகு, மூத்தவளுக்கு காய்ச்சல் அனலாய்க் கொதிக்க, டாக்டரிடம் போகத் துடித்தாள் செண்பகம்.
"டாக்டருக்குக் கொடுக்க காசு எங்கிருக்கு?" கத்தினான் மாரி.
"அந்த உண்டியல்...?" இழுத்தாள் செண்பகம்.
"ச்சூ... அது குலதெய்வம் கோயிலுக்குப் போகச் சேர்த்து வெச்சது... அதைத் தொடக்கூடாது."
வேறு வழியில்லாமல் கஷாயம் வைத்துக் கொடுத்து மூத்தவளைத் தேற்றினாள் செண்பகம்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் தெருவில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்த யாரோவொரு கிழவி இவர்கள் வீட்டின் முன் வந்து மயங்கி விழ, பாய்ந்து வந்தான் மாரி.
கிழவியின் முகத்தில் நீர் தெளித்து கண் விழிக்கச் செய்ய, அவள் "பசி ....பசி" என்று பிதற்றினாள்.
"ஏண்டி வீட்ல சாப்பிட ஏதாச்சும் இருக்கா?" செண்பகத்திடம் கேட்டான் மாரி.
உதட்டைப் பிதுக்கினாள் அவள்.
மாரி பக்கத்து வீடுகளைப் பார்க்க, "இந்த நேரத்தில் எந்த வீட்டிலும் எதுவும் இருக்காது... எல்லாரும் கழுவிக் கவிழ்த்திருப்பாங்க" என்றாள் செண்பகம்.
சட்டென்று எழுந்த மாரி வேகமாய் வீட்டிற்குள் சென்று உண்டியலை உடைத்தான். அதே வேகத்தில் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தான்.
சில நிமிடங்களில் கையில் உணவுப் பொட்டலத்துடன் வந்த மாரி அவசர அவசரமாய்ப் பிரித்து கிழவிக்கு ஊட்டினான்.
முழுவதையும் உண்டு முடித்த கிழவிக்கு தண்ணீரைக் கொடுத்த மாரி, "என்னம்மா இப்பப் பரவாயில்லையா?" கேட்டான்.
அவள் "பரவாயில்லை" என்று தலையாட்டிச் சொல்ல.
"கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்திட்டு... அப்புறமா போ" என்ற மாரி மனைவியை பார்த்து, "குழந்தைகளுக்கு இன்னைக்கு ராத்திரிக்கு பூரிக்கிழங்கு பண்ணிடலாம்!" என்றான்.
(முற்றும்)
-------
முகில் தினகரன், கோவை