மண்டலே,
மியான்மர் நாட்டில் கடந்த 28-ந் தேதி மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டலேவுக்கு அருகே மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை அடியோடு சாய்த்தது.
விமான நிலையம், சாலைகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன. தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது. வீடுகளை இழந்தவர்கள் வீதியில் படுத்து தூங்குவதும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லல் படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நிலநடுக்கம் ஏற்பட்ட நகரங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. நேற்று தலைநகர் நேபிடாவில் 63 வயது மூதாட்டி ஒருவரை, மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.