வாசல்வரை சென்று வழியனுப்பினான். இன்று ஒரு சந்தோஷமான மனம் நிறைவான நன்னாள்.
மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். வெள்ளை மனம் கொண்டவள். மெத்தப் படித்தவள். மெழுகு சிலை போன்றவள்.
என் பெற்றோரிடம் எடுத்துரைத்தேன் என் மனம் மலர்விழியை விரும்புவதை. ஆரம்பத்தில் அதிர்ச்சி காட்டினாலும் பின் மெல்ல வளைந்து கொடுத்தார்கள்.
இருமுனை பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந்தது. சவரன் குறித்து, சம்பளங்கள் குறித்து, சத்திரம் குறித்து பேசினார்களே தவிர இன்னும் பெண் பார்க்கும் படலம் நடத்தவில்லை.
இதோ இரண்டு கார்களில், டூ வீலர்களில் அத்தை மாமா என பதினோரு பேர் பெண் பார்க்க கிளம்பியாயிற்று.
மலர்விழி வீட்டிலும் கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர்கள் இருந்தார்கள்.
போனதும் தாகத்திற்கு தண்ணீர், பிறகு சொஜ்ஜி பஜ்ஜி காபி என உபசரிப்புகள் ஆரம்பித்தது. அதற்குள்
மாப்பிள்ளையாக வந்திருக்கும் கார்த்திக்கின் மாமா பெண்ணையும் வரச்சொல்லுங்க பாத்துரலாம் என்றதும் சற்று அமைதியானது.
"வானதி, நீ போய் மலரை அழைச்சிட்டு வா" என்றதும் பெண்ணின் பெரியப்பா பெண் அழைத்து வந்தாள்.
மலர்விழி மலர்ந்த முகத்துடன் வானதியின் தோளைப் பிடித்தவாறு விந்தி விந்தி நடந்து வந்தாள்.
கார்த்திக் வீட்டில் அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தார்கள்.
"என்னக்கா, பொண்ணு நொன்டியா"
"என்னங்கண்ணி, காலு சரியில்லை, இப்படி பொண்ணு பார்த்திருக்கீங்க"?
இப்படி ஒருவருக்கொருவர் அரை மனதாக பேச ஆரம்பிக்க, பெண் வீட்டார் கலங்கிப் போய்விட்டனர்.
"என்னடா பொண்ணு சரியா நடக்கமாட்டான்னு சொல்லவே இல்லையே? இப்படிப்பட்ட பொண்ணு நமக்கு வேணாம்டா, சொன்னாக் கேளு" கார்த்திக்கின் அம்மா மெல்ல கரைக்க ஆரம்பித்தாள்.
பேச்சுக்களும் ஏச்சுக்களும் ரொம்ப கைமீறி போய்க் கொண்டிருந்தது.
மலர்விழி கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தாள். பெண் வீட்டாரிடம் எதையும் முழுமையாக பேச விடவில்லை. ஏமாற்றியதாக சொல்லி மிகவும் கண்டிப்புடன் பேசி, கிட்டத்தட்ட கிளம்பத் தயாரானார்கள்.
கார்த்திக் பேச ஆரம்பித்தான். "ரெண்டு வருடத்திற்கு முன்னாடி என்னோட வண்டி மோதி மலர் கீழ விழுந்ததுல அவங்களோட கால் எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு. சர்ஜரி செய்ததில் கால்கள் எல்லோரையும் போல் வேகமாக நடக்க முடியாமல் போனது.
என்னால் அவங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை விரும்பி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். இந்த வேறு யாரும் இருந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கைக்கும் என்னால் முடிந்த உதவிகள் செய்திருப்பேன் என்று உறுதியாக கூறினான்.
"மலர் நீங்க கவலை படாதீங்க, நம்ப கல்யாணம் நடக்கும். நான் இருக்கிறேன் என்றான்.
பிறகென்ன பிள்ளை வீட்டார் தங்கள் தவறை உணர்ந்து, ஒரு பெண்ணை இழிவாக பேசியதற்கு வருந்தி மன்னிப்பும் கேட்டனர்.
ஆயிற்று இரண்டு வருடங்கள் கழித்து இன்று மலர்விழிக்கு வளைகாப்பு சீமந்தம் விமரிசையாக நடந்தது.
பிறந்த வீட்டுக்கு பிரசவத்திற்காக செல்லும் மலர்விழியை வாசல்வரை காரில் சென்று வழியனுப்பி வைத்தான். இருவரின் கண்களும் மனதும் புத்தம் புது வரவை நினைத்து பூரித்திருந்தது. சுபம்.
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்