tamilnadu epaper

முன் மழைக்காலத் தட்டான்கள் !

முன் மழைக்காலத் தட்டான்கள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் பா. மீனாட்சிசுந்தரம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

வெளியீடு :

வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ், செரி ரோடு, சேலம் – 636 007, 

பக்கம் : 96, விலை : ரூ. 80.


******


      முன் மழைக்காலத் தட்டான்கள் கவிதை நூல், நூலாசிரியர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறச் சீற்றத்தை, காதலை, மலரும் நினைவுகளைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. சிங்கப்பூர் கவிஞர் சுபா செந்தில்குமார் அவர்களின் அணிந்துரை நன்று. பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரை நன்று.


      தலைப்புகள் இல்லாத புதுக்கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.


பகிர்ந்து கொண்ட 


முத்தங்களை 


சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் 


பாதி முத்தம் படிக்கட்டில் 


நீண்ட முத்தம்

நிலா முற்றத்தில் 


முதல் முத்தம் பயத்தில் 


அந்த கடைசி முத்தம் 


வேண்டாம் அதை 


சிந்திக்கத் துணியவில்லை மனம் !


இக்கவிதையைப் படிக்கும் காதலில் தோல்வியுற்றா வாசகர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளது, கவிதை நன்று.


ஜன்னல் வழி 


இலை போல் 


உதிர்ந்து கொண்டிருந்தது இரவு 

      அதன் தாள்களில்


கவிதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தது 


நிலா !


ஒருவரை ஒருவர் இதழ் வழி 


பருகிக் கொண்டிருந்தோம்   


நாம் !


முத்தம் பற்றி வித்தியாசமாக எழுதி உள்ளார். ஒருவரை ஒருவர் இதழ் வழி பருகிக் கொண்டிருந்தோம் என்ற வரிகளின் மூலம் முத்தத்தை நினைவூட்டி சித்தத்தில் நிற்கின்றன வரிகள்.


பறவையின் 


விரிந்த சிறகில் 


ஒளிந்து கிடக்கிறது

      ஒரு வனமும் 


மரப்பிடி போட்ட 


ஒரு கோடாரியும் !


இந்தக் கவிதையை அணிந்துரையில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பின் அட்டையிலும் பிரசுரமாகி உள்ளது. பறவைகளால் வனம் உருவாகின்றன. அந்த வனங்கள் மரப்பிடி போட்ட கோடாரிகளால் அழிக்கப்படுகின்றன. இனத்தை அழிக்க அந்த இனமே உதவுவது போல மரத்தை அழிக்க மர கைப்பிடி உதவுவது வேதனை. இப்படி பல சிந்தனைகளை விதைத்தது ஒரு கவிதை.


மேகங்களின் முத்தமிடல் 


உங்களுக்கு தெரிகிறதா

      காதலன் காதலி நெற்றியில் 


அல்லது காதலி காதலன்      


நெற்றியில் 


முத்தமிடுவது தெரிகிறதா 


அல்லது வேறெதுமா?


வானில் உள்ள மேகங்களின் நகருதல் முத்தத்தோடு கற்பனை செய்த கற்பனை அழகு, பாராட்டுக்கள்.


தலை கோதியபடி பச்சைத் தேநீர் !

      பருகக் கொடுக்கிறாய் 


உன் கை கால் விரல்

      நெட்டி முறிக்கிறேன் 


களைப்பிலும் நமக்கு

      தேவை இருக்கிறது கலவி 


கலவியின் முடிவில் நெற்றியில்

      ஒற்றை முத்தம் வைக்கிறாய் 


தொடர்புள்ளி என

      தொடர்கிறது அது!


கூடல் பற்றி பதிவை துளியும் ஆபாசமின்றி, விரசமின்றி மிக மேன்மையாகவும், மென்மையாகவும் பதிவு செய்த விதம் அருமை.


தேநீர் விடுதியின் 


தாழ்வாரத்திலிருந்து

      கொட்டிக் கொண்டிருக்கும் 


மழையை கையில்

      ஏந்தி ரசிக்கிறார் 


ஒரு முதியவர்

      கணப்பொழுதில் பால்யத்தில் 


கொண்டு சேர்க்கிறது

      ஒரு துளி மழை!


மழையை எந்த வயதிலும் ரசிக்கலாம். இளம் வயதில் மழையில் நனைந்து விளையாடலாம். ஒரு முதியவரின் கையில் விழுந்து மழைத்துளி மலரும் நினைவுகளை மலர்வித்த்து என்ற உண்மையை வாசகர்களின் மனக்கண்களில் காட்சிபடுத்தியது சிறப்பு. 


அப்பன், ஆத்தாள் 


மனைவி, பிள்ளைகள் பிரிவின்

      கண்ணீர்த் துளிகளாய் 


வந்து விழுகிறது

      அயல் தேசத்து மண்ணில் மழை!


ஆனந்தமாக ரசிக்க வேண்டிய மழை கூட புலம்பெயர்ந்து அயல்நாட்டில் சுற்றம் பிரிந்து வாழும் போது வலை தரும் என்பது உண்மையே.


வனங்களில் 


வாழ்ந்த நாட்களை 


நினைத்துப் பார்க்கிறேன் 

      வனத்திலிருந்து மரங்கள் 


வெட்டியெடுத்து கதவு 


சாளரம் 

      செய்த போதிலும் 


வனங்களில் வீசிய சமத்துவக் காற்று /

      இங்கு வீசவில்லையே!


வனங்கள் காற்று மிகவும் சுத்தமாக இருக்கும், மூலிகை வாசம் தரும். காடுகளின் சுகம் நாடுகளில் இல்லை என்பதை உணர்த்திய விதம் நன்று. 


பொம்மைக்கு சோறூட்டிய மகள் 


என்னை நோக்கி 

      கை நீட்டுகிறாள் 


அதில் 


தங்கைக்கும், தம்பிக்கும்

      ஊட்டிய 


சோற்றுருண்டையை 


எனக்கும்

      பகிர்ந்தளித்த அம்மாவின் சாயல்!


குழந்தைகளின் சேட்டைகளை விளையாட்டைக் காண கண்கள் இரண்டு போதாது, விளையாட்டு சோறூட்டிய அன்னையைப் பற்றீய நினைவை மலர்வித்ததைப் பதிவு செய்து படிக்கும் வாசகர்களுக்கும் அவரவர் அன்னையை நினைவூட்டி உள்ளார், பாராட்டுக்கள்.


அந்த நதி மீன்களுக்கு 


யாரோ சொல்லி

      இருக்கிறார்கள் 


நிலா 


நதியின் குழந்தை 

      என்று 


மீன்கள் வட்டமிட்டு 


முத்தம்

      கொடுக்க முயல்கின்றன.


இயற்கையைக் காட்சிப்படுத்தும் விதமாக நதியில் மிதக்கும் நிலவையும், நிலவைக் கடிக்க முயன்றிடும் மீன்களையும் உற்றுநோக்கி இயற்கை விருந்து வைத்துள்ளார், பாராட்டுக்கள்.


பால்ய தோழி 


பள்ளித் தோழி 


சகோதரி

      காதலி 


மனைவி 


மகள் என 


பலமுறை கொல்லப்பட்டு

      ஆண் மீண்டும் உயிர்த்தெழும் இடம் 


அன்னை மடி!


ஆறுதலும் ஆனந்தமும் தருவது அன்னை மடி பெற்ற தாயின் மடியில் தலை வைத்து ஆறுதல் தேடும் இன்பத்திற்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லை. உலகில் உள்ள உறவுகள் அனைத்தும் வெறுத்தாலும் வெறுக்கவே வெறுக்காத ஒரே உயர்ந்த உறவு அன்னை. அன்னையின் உயர்வை சிறப்பை உணர்த்திய விதம் அருமை.


குழந்தைகள் விசித்திரமான 


கேள்வி எழுப்புகிறார்கள்

      என்பது உண்மையல்ல 


அதுவரை நாம் எதிர்கொள்ளாத

      கேள்வியை எழுப்புகிறார்கள் 


குழந்தைகள் 


நமது

      முதல் ஆசான் !


குழந்தைகள் கேள்வி கேட்டல் சினம் கொள்ளும் பெற்றோர்களே அதிகம். அவர்களது கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி வளர்த்தால் அறிவார்ந்த குழந்தைகளாக வளரும். மேலும் குழந்தைகளின் கேள்விகள் பெற்றோர்களையும் அறிவாளியாக்கும். மழையை ரசித்த இன்பத்தை தரும் விதமாக நூல் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.


*****