மும்பை, மே 14
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
60 வயதிற்குட்டபவர்கள்
இதற்கிடையே, டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கி உள்ளது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.
புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.