நேரம் காலை 7.30 மணி.
நகரின் மையமான வணிக பகுதியில் உள்ள அந்த பிரபலமான மல்டி ஷாப்பிங் ஸ்டோரை 9.00 மணியளவில் திறப்பதற்கு உள்ளே இருந்த பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, அந்த கடையின் முன்பாக சில கார்களும், காவல்துறை வாகனமும் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து முக்கியமான அலுவலர்களை மட்டும் உள்ளிருக்க அனுமதித்துவிட்டு, இதர பணியாளர்களை வெளியேற்றினார்கள். பிறகு, கடையை உள்பக்கமாக, பூட்டிவிட்டு குழுக்களாக பிரிந்து அனைத்து பிரிவுகளிலும் சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
ரெய்டு நடக்கும் செய்தி அறிந்து கடையின் உரிமையாளர் தர்மலிங்கம், மகன் சந்தோஷுடன் கடைக்கு வந்தார்.
விஷயத்தை கேள்விப்பட்ட தர்மலிங்கத்தின் தொழில்முறை போட்டியாளர் கோவிந்தராஜன் மனதுக்குள் சந்தோஷம் அடைந்தார் .
முக்கியமாக, தன்னுடைய திட்டம் நிறைவேறியது குறித்து மகிழ்ச்சி அடைந்தார் .
கோவிந்தராஜன், தர்மலிங்கம் இருவரும் ஓரே ஊரை சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளனர். துணிமணிகள் துவங்கி பாத்திரங்கள், மரச்சாமான் போன்ற அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும்
நிறுவனம் நடத்தி வந்தனர்.
இருவரும்,ஒரே தொழிலில், ஓரே பகுதியில் நடத்தி வந்தாலும், தர்மலிங்கத்தின் கடையில் குவியும் கூட்டம், தன்னுடைய கடைக்கு வருவதில்லை என்ற குறை கோவிந்தராஜனுக்கு உண்டு.
தர்மலிங்கத்தின் கடையில் லட்ச கணக்கில் வியாபாரம் நடைபெறுவது குறித்து கோவிந்தராஜனுக்கு பொறாமையும், ஆதங்கமும் இருந்து வந்தது.
எனவே, எப்படியாவது தர்மலிங்கத்தை அரசாங்கத்திடம் மாட்டிவிடுவதுடன், குறைந்தது ஓரு வாரமாவது அவரது கடையை மூடவைக்க வேண்டும் என
கோவிந்தராஜன், தீர்மானித்தார்.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்களோ, மாட்டார்களோ? என சந்தேகம் ஏற்பட்டதால்,
டெல்லியில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு ரகசியமாக, வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவித்தார்.
அதன் எதிரொலியாகவே இன்று சோதனை நடைபெறுகிறது.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றிய சோதனை குழு, இறுதியில் தற்காலிகமாக கடைக்கு சீல் வைத்துவிட்டு சென்றது.
கோவிந்தராஜன், தனக்கு ஒன்றும் தெரியாதது போல, தர்மலிங்கத்துக்கு போன் செய்து, ஆறுதல் கூறினார்.
ஆனால், அவரிடம் பேசிய தர்மலிங்கம்,
“யாரோ வேண்டாதவர்கள், பொறாமை பிடித்தவர்கள் செய்த வேலை இது, அதுக்காக நான் கவலைப்படவில்லை, இரண்டொரு நாளில் கடையை திறந்து விடுவேன்”என கூறினார்.
அதை கேட்ட கோவிந்தராஜன் மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.
மறுநாள் காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிய கோவிந்தராஜன்,
அவரது பேரன் சஞ்சய் ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்டு , பேரனிடம், "நல்லா படிடா” என்றார்.
அவர் அறைக்குள் நுழைந்தவுடன், போன் ஒலித்தது,
அதை எடுத்து ஹலோ என்றவுடன், அதில் வந்த செய்தியை கேட்டவுடன், ” ஐயையோ, மோசம் போச்சே” என கத்தியபடி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்,
சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் சந்தோஷ் ,தந்தையின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான்,
"என்னப்பா ஆச்சு" எனக்கேட்டான்,
கோவிந்தராஜன் தலையில் அடித்துக்கொண்டே, நம்ம கோடௌன்ல தீ புடிச்சு எரியுதாம், தீ அணைப்பு வண்டி வற்றதுக்குள்ள முக்காவாசி சரக்கு எரிஞ்சுபோச்சாம், கோடி ரூபாக்கு மேல சரக்கு இருந்துச்சு, அத்தனையும் போச்சே, என அரற்றினார், மகன் அப்பாவை அழைத்துக் கொண்டு கோடௌன் -க்கு
கிளம்பினான்.
கோவிந்தராஜன் கீழே இறங்கி வரும்போது, ஹாலில் அமர்ந்திருந்த பேரன், நிலைமை தெரியாமல்,
"பிறர்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் "
என திருக்குறள் படித்துக் கொண்டிருந்தான். அதை கேட்டபடி கோவிந்தராஜன் தலை குனிந்தபடியே மகனுடன் அவசரமாக வெளியே புறப்பட்டு சென்றார்.
கோபாலன் நாகநாதன்,
சென்னை -33