இன்றைய தமிழ்நாடு பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் இளம் வயதில் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றிய கட்டுரை பலவிதமான அரிய தகவல்களை அறிய வைத்தது. குறிப்பாக காலை உணவை சாப்பிடாமல் இருப்பது இரவு உணவை நேரத்திற்கு உண்ணாமல் இருப்பது போன்ற செயல்கள் உடலில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லியவிதம் அருமை. நாயன்மார் வரலாறு தலைப்பிலான கட்டுரையில் இன்றைய தினம் வெளியான கண்ணப்ப நாயனார் வரலாறு படித்தேன் .இறைவனை வழிபடுவதற்கு ஆகம விதிகளை விட அன்பான உள்ளம் இருந்தால் போதும் இறைவனை கண்டு விடலாம் என்கிற கருத்தை உணர்த்தும் விதமாக கண்ணப்ப நாயனார் மீது இறைவன் அருளிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. நூல் விமர்சனம் பகுதியில் ராஜேஷ் குமார் அவர்களின் என்னை நான் சந்தித்தேன் என்கிற தலைப்பில் ஆன நூலை பற்றிய விமர்சனம் எழுதிய ஸ்ரீகாந்த் மிக அழகாக நேர்த்தியாக நூலில் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி இருந்த விதம் நூலை வாங்கி படிக்க வேண்டும் என்கிற ஆவலை வாசகர்களிடம் விதைக்கின்ற அளவில் இருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. இன்றைய இதழில் அருள்தரும் ஆன்மீகம் பகுதியில் வெளியாகி இருந்த ஆன்மீக செய்திகள் அனைத்துமே ஆன்மீக அன்பர்களுக்கு பல்வேறு விதமான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகவல்களை உள்ளடக்கி யதாக இருந்தது.
-கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி