tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-17.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-17.05.25


  'சுனிதா மாறினாள்!' என்ற ராதா பாலுவின் சிறுகதை சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும் என்பதை கொஞ்சம் கடுமையாகவே உணர்த்தியது. எப்படியோ காடைசியில் சுனிதா ஒரு நல்ல மனைவியாகவும், பொறுப்பான தாயாகவும் மாறியது மகிழ்ச்சியை தந்தது.


   வியாபாரிகள் ஒரு பொருளின் விலையை அளவுக்கு மீறி குறைத்து விற்றால், அதில் ஏதாவது தில்லு முல்லு நிச்சயம் இருக்கும் என்பதை 'எடை' என்ற கோபாலன் நாகநாதனின் சிறுகதை உணர்த்தியது. இதில் வியாபாரிகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. நுகர்வோர்களும் பொருள்களை தகுந்த விலைக்கொடுத்து வாங்கவிரும்பவேண்டும். விலை கொள்ளை மலிவு என்று போய் விழுந்தால் அதில் நிச்சயம் ஏதாவது தில்லுமுல்லு இருக்கத்தான் செய்யும்.


  ஹரணியின் 'வாழ்ந்தே தீருவோம்' தொடர்கதை இவ்வளவு சோகத்தில் மூழ்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சரவணனுக்கு நடந்த விபத்து, வள்ளியம்மையை போலவே எனக்கும் அதிக மனவலியை தந்துவிட்டது. ஆனாலும், ஒரு கதை என்று பார்க்கும்போது, அடுத்து என்ன நிகழும் என்று ஒரு எதிர்பார்பை ஏற்படுத்துகிறது.


  'இறை வழிபாடு சுடர் வழிபாடு என்ற கட்டுரையின் மூலம் ரமா ஸ்ரீனிவாசன் திருவண்ணாமலையின் ஆன்மிக சிறப்பை சொல்லியிருக்கிறார். ஒளியின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பையும், ஒளியே இறைவன் என்பதையும் இக்கட்டுரை மூலம் நான் உணர்ந்தேன்.


  'வாளுக்கு வேலி அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எஸ்.எஸ். தென்னரசு என்ற எழுத்தாளர் 'செம்மாதுளை' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்பதையும், அதுபோல இவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு கலைஞர் மு.கருணாநிதியின் வரலாற்று நவலான 'தென்பாண்டி சிங்கம்' எழுதப்பட்டது என்பதையும் அறிந்தபோது, வாளுக்கு வேலி அம்பலத்தின் சிறப்பை நன்கு உணரமுடிந்தது.


  'அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் உருட்டுகள்' அத்தனையும், அட, நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள். படிக்கும்போதே சிரிப்பும் வந்தது! ஆனாலும் எல்லாமே அடிக்கடி நாம் கேட்கிற வார்த்தைகள்!


  'பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு', தூக்கமின்மை பிரச்சனையா?' என்ற இரண்டு கட்டுரைகளும் நடைமுறையில் வாழ்க்கையில் மிகவும் பயன் தரக்கூடியது. எல்லாவகையிலும் பயன் தரக்கூடிய ஒரே நாளிதழ் என்றால் அது நமது தமிழ்நாடு இ. பேப்பர்தான்!



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.