"ஏம்பா எனக்கு உடம்பு கொதிக்குதான்னு தொட்டு தொட்டு பாத்தியே, அந்த கோழியிடம் இருந்து பிரித்து அந்தக் குஞ்ச கொதிக்க கொதிக்க வெந்நீர்ல வச்சய அத பாத்து அந்த தாய்க்கோழியும் அப்படிதானே துடிதுடிச்சிருக்கும்" என்று ஒரு சிறு குழந்தை கேள்வி கேட்கும்போது, அதன் பாசம் மிகுந்த பரிதவிப்பை நினைத்து வருத்தமாகதான் இருந்தது. 'பறவை பற பற' என்ற லால்குடி பெ.நாராயணனின் சிறுகதை மனதை ஒரு இனம்புரியாத வருத்தத்தில் ஆழ்த்தியது.
குழந்தை இல்லாதவர்களின் மனநிலையும் சிந்தனையும் விநோதமானது. அதை அப்படியே உணர்த்தியது முகில் தினகரனின் 'என் மன வானில்' சிறுகதை.
கவி. வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்' தொடர்கதையில் ஜோதிடர் வேறு பயமுறுத்திவிட்டுப் போய்விட்டார். சௌந்தர்யா அம்மன் கோவிலில் எல்லாம் நல்லபடியா முடிய நீ தாம்மா அருள் புரியனும் என்று சொல்லி வேண்டிக்கொண்டிருக்கும் போது, அவளை தூரத்தில் இருந்து கவனிக்கும் இரண்டு கண்கள் யாருடையது? அடுத்து என்ன நடக்கப்போகிறது? இந்த தொடர்கதை விறு விறுப்பாக செல்கிறது.
அந்த காலத்தில் பல தியாகிகள் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்து போராடியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வி.எம். முனுசாமியின் வரலாறு படித்தபோது, அவர்களுடைய போராட்டம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கண்கலங்கிப் போனேன். வி.எம். முனுசாமியின் தியாக வாழ்க்கையை ஒரு வீரப்போராட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஹரணியின் 'கோடைக்காலக் கவிதைகள்...' கோடை கால இன்னல்களை, அதன் வெப்பத்தை அப்படியே உணர்த்தியது. கோடை நல்லதா? கெட்டதா? மனுஷன் நல்லவனா? கெட்டவனா? வெளியில் போகலாமா? வேண்டாமா? வாழணுமா? வாழ வேண்டாமா? என்ற அவரது கேள்விகள் ஒவ்வொன்றும் என் மனதில் இன்னும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
நான் வீணை என்றால் அதில் ஏதோ இரண்டு மூன்று வகைகள்தான் இருக்கும் என்றுதான் இதுநாள்வரை நினைத்துக்கொண்டிருந்தேன்.
வீணையில் 32 வகைகள் இருப்பதும், அதில் 31 வகை வீணைகளை தெய்வங்கள் இசைப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் ஆச்சரியம் தரும் தகவல்களாகும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.