தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து அன்பு சகோதர சகோதரிகளுக்கும் இனிய வணக்கம் !
உலக நாடுகளை ஒரு சுற்று சுற்றி விட்டு இடையிடையே இந்தியாவுக்கு வந்து பெரிய திட்டங்களின் திறப்பு விழாவை நடத்துகிறார் பிரதமர்.
பிரதமர் பாம்பன் ரயில் பாதையை திறந்து வைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் தனது பங்குக்கு நீலகிரி மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களை திறப்பு விழா செய்து கொண்டிருந்தார்.
தமிழக தலைவர்கள் தமிழில் கையெழுத்து போடுவதில்லை என்று பிரதமர் குறை கூறியிருக்கிறார். தங்களது மொழிப்பற்றை காண்பிப்பதற்காக படிக்கப் போகிறவர்களுக்கு புரியாத மொழியில் கடிதங்களை அனுப்புவதும் கையெழுத்து போடுவதும் பயனற்றது என்பதை உணர்ந்துதான் இவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருக்க கூடும் கூடும்.
ஆட்சி மொழியிலேயே மத்திய அரசு பல கடிதங்களை அந்த மொழியே தெரியாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது. அவை புரியும் மொழியில் இருந்தால் அந்த கடிதங்களால் பலன் கிடைக்கும்.
மொழி என்பது இரண்டு மனிதர்களுக்கு இடையே பேசிக் கொள்வதற்கும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கும்
பாலமாக இருக்கிறது.
சொத்து வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
சமீபத்தில் தமிழகம் பூராவும்
உள்ளாட்சி அமைப்புகள்
தரம் உயர்த்தப்பட்டன. அவற்றில் முக்கியமானது
மாநகராட்சி பகுதிகளை சுற்றி இருக்கும் ஊர்களை மாநகராட்சியுடன் இணைத்திருப்பதுதான்.
குக்கிரமங்கள். குடிசை வீடுகள் மற்றும் ஒரு சில தெருக்களே உள்ள பல ஊர்களில் முக்கியமானது விவசாயம் மட்டுமே. வெறும் விவசாய நிலம் மட்டுமே இருக்கும் ஊர்களை மாநகராட்சி பகுதிகளாக சேர்ப்பது என்பது கேள்விக்குரியது.
இனி அவர்கள் பயனற்ற நிலங்களுக்கும் சொத்து வரியை கட்ட வேண்டி இருக்கும் மாநகராட்சியால் அறிவிக்கப்படும் அனைத்து வரிகளையும் அவர்கள் செலுத்த வேண்டும்.
இந்த ஊர்கள் இணைப்பு திட்டம் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணி செய்யப்பட்டிருக்கிறது என்பது அந்தந்த ஊர்க்காரர்கள் கருத்து.
வீடுகளில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் தனியாக அவர்கள் மாடியில் சோலார் பிளான்ட் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள மாநில அரசு கூறியிருக்கிறது.
நவீன மின் சாதனங்கள் புழக்கத்துக்கு வந்துவிட்ட இந்த காலகட்டத்தில் 500 யூனிட் மின்சாரம் என்பது மிக சாதாரணமானது. அதை ஆயிரம் யூனிட் ஆக மாற்றினால் நல்லது.
வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு இதனால் நிச்சயம் பிரச்சினை ஏற்படும்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்