tamilnadu epaper

'செல்' பேச்சு கேட்கவா?

'செல்' பேச்சு கேட்கவா?


கமலேஷ் எப்போதும் 'செல்'லும் கையுமாக இருப்பவன். 


போனில் அவன் பேசுவதற்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் சாட் செய்வதற்கும், எந்த லொகேஷனாக இருந்தாலும் செல்ஃபி எடுப்பதற்கும் தான் அதிகம் பயன்படுத்துவான். 


இது தவிர பணப்பரிவர்த்தனை, செல்லும் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங், இ. பி பில் மற்றும் சின்ன சின்ன டைப்பிங் இப்படி எல்லாமே செல்போனை வைத்தே முடித்து விடுவான். 


இவ்வளவு ஏன்? டி. வி மற்றும் ஏர்கன்டீஷனர் போன்றவற்றை அதற்குரிய ரிமோட் இல்லாமல் செல்போன் மூலமே ஆப்பரேட் செய்து விடுவான். 


இரவு நேரங்களில் மிட் நைட் வரை செல்போனில் கேம் மற்றும் புதிய திரைப்படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பான். வீட்டில் யாராவது சத்தம் போட்டபிறகே போனை தலையணைக்கடியில் போட்டுத் தூங்க ஆரம்பிப்பான். 


ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை

நாட்கள் செல்ல செல்ல 

கமலேஷின் கண்களில் நீர் வர ஆரம்பித்து கடைசியில் கண்ணில் வலியும் சேர்ந்து வந்தது


கண் மருத்துவமனைக்கு கமலேஷ் அப்பா ஒருநாள் அவனை அழைத்துச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், "கண் அதிகபட்ச ஒளியைப் பார்த்ததாலோ

அதிலும் இரவு நேரங்களில் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு வெகுநேரம் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரும் அதிகபட்ச ஒளியை உற்றுக் கவனிப்பதாலோ உதாரணமாக செல்போன் போன்ற நுண்ணிய ஆனால் அளவுக்கதிகமான வெளிச்சத்தை தரக்கூடிய சாதனங்களை அதிக நேரம் குறிப்பாக இரவில் பார்க்கவே கூடாது இனிமேல்! மற்றபடி சீக்கிரம் குணமாகிவிடும்!"என்று டாக்டர் கூறவும் அதன்படியே கமலேஷ் நடந்து கொண்டான். 


ஆனால் செல்ஃபி மோகம் மட்டும் குறையவேயில்லை. 

ஒருநாள் இரவில் வீட்டு வாசலில் நின்று தெருவிளக்கு வெளிச்சத்தில் செல்ஃபி எடுக்கும் போது இரவு ரோந்து வந்த புதிய இன்ஸ்பெக்டர் சாமுவேல் அவனை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினார். 



சில நாட்கள் ஒழுங்காக இருந்தான். அவனால் அதற்கு மேல் கன்ட்ரோலாக இருக்க முடியவில்லை. ஓர் இரவு இலேசான தூரல் போட்டுக்கொண்டு இருந்தது. எல்லா இடங்களிலும் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது. 



கமலேஷ் க்கு இந்த நேரத்தில் நாம் ஒரு செல்ஃபி எடுத்தால் என்ன என்று வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் கோவிலுக்கு பின்புறம் சென்று வீடுகள் அதிகமில்லாத பின்புற பக்கவாட்டில் நின்றிருந்த ஒரு காரில் நின்றபடி சின்னக் கோபுரம் என்பதால் அது தெரியும்படி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு சாலையைக் கடக்கும் போது திடீரென்று மின்சாரம் வர அந்த நேரத்தில் ரோந்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஜீப் பின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அவனைப் பார்த்து விட்டார். அவன் கையிலிருந்த செல்போனைப் பார்த்து விட்டு இந்த நேரத்தில் கூட இவன் செல்போனோடு அலைகிறானே பைத்தியக்காரன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டவர், கமலேஷ் அருகில் வண்டியை நிறுத்தி "தம்பி! இங்கே வா! இந்த மழையில் அதுவும் இந்த ராத்திரியில் உனக்கு என்ன வேலை? உன்னை ஏற்கனவே வார்ன் பண்ணிருக்கேன்ல!" என்று சாமுவேல் அதட்டவும் என்ன பேசுவதெனத் தெரியாமல் முழித்தான் போலீசைப் பார்த்த பயத்தில். 

"உன் போனைக்கொடு! செல்போனில் அப்படி என்னதான் இருக்கிறது?" என்றவாறு அவனிடமிருந்து போனை வாங்கினார். 


கமலேஷ் "ஒண்ணுமில்ல சார்! ஏதாவது வித்தியாசமான சூழலில் செல்ஃபி எடுப்பேன் சார்!" என்றான். 

அவன் கூறியதை ஒரு காதில் கேட்டுக்கொண்டே செல்போனில் அவன் எடுத்த போட்டோக்களை எல்லாம் பார்த்தவர் கடைசியில் அவன் கோவிலில் கார் அருகில் நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபி யைப்

பார்க்கும்போது நன்றாக சூம் பண்ணிப்பார்த்தவர் அந்த காரின் பதிவு எண் இல்லாமல் இருந்தது கண்ணில் பட அவருக்கு ஏதோ பொறி தட்டியது. உடனே அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கோவிலின் பின்பக்கம் சென்றார். 


அவர் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது. 

சில மாதங்களாக கோவிலில் சிலை திருட்டு அதிகமாக நடப்பதால் சாமுவேல் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 


காரின் மறைவில் மறைந்திருந்து காத்திருந்த சாமுவேல் டீம் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை கையும் களவுமாகப் பிடித்தது. 


அடுத்த நாள் காலையில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கமலேஷ் அப்பாவை வரச் சொல்லி தகவல் வர,ஏற்கனவே மகனைக் காணாமல் பதறிப் போன கமலேஷ் அப்பா

பதட்டமும் அழுகையுமாக போலீஸ் ஸ்டேஷன் விரைந்தார். 

அங்கே மகனைப் பார்த்தவுடன், "அடேய்! என்னடா பண்ணித் தொலைச்ச?" என்று கோபத்தில் மகனைப் பார்த்து கத்தினார். 

உடனே அவரைக் கையைப் பிடித்து தடுத்த இன்ஸ்பெக்டர் சாமுவேல், " அய்யா! எல்லாம் நல்ல விஷயம் தான்! அவன் எப்போதும் செல்போனோடு அலைகிறானே எனத் திட்டினோமே! அதிலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு!" என்று நேற்று இரவு நடந்ததை

விவரமாகக் கூறினார். 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கமலேஷ் அப்பா சந்தோஷத்தில் மகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆனந்தம் அடைந்தார். 


இப்படி ஒரு மிகப்பெரிய திருட்டுக் கும்பலைப் பிடிக்க முக்கிய காரணமான கமலேஷை போலீஸ் டிபார்ட்மென்ட்

பாராட்டி சன்மானம் வழங்கிக் கௌரவப் படுத்தியது. 


-பிரபாகர்சுப்பையா,

மதுரை_12.