வெற்றிக்கோட்டையை காக்கும்
தலையாய காவலர்களின்
தலைமை காவலன் நீ!
தன்னம்பிக்கை தாயின்
தவப்புதல்வன் நீ!
துன்பம் என்ற சொல்லின்
பொருளறியா செல்வந்தன் நீ!
வறுமையெனும்
காரிருளை போக்குபவனும் நீ!
சிறுத்துளியை பெரு வெள்ளமாய்
ஆக்குபவனும் நீ!
மனிதர்தம் மேன்மையை
மனிதர்க்கு உணர்த்துபவனும் நீயே!
அவநம்பிக்கையும் சோம்பலும் கொண்ட
கூட்டணிப்படையை
அறவே அழித்தொழிக்கும் ஆயுதம் நீ!
அலுப்பையும் சலிப்பையும்
அண்டவிடாத
அற்புத மூலிகை நீ!
உற்சாகமும் உத்வேகமும்
உன்
உடலோடு ஒட்டிய கவசங்கள்!
நேர்மையும் உண்மையும்
உன் ஒளி வீசும் அணிகலன்கள்!
மனிதர்கள்
வாழ்ந்து முடிப்பினும்
சாகாவரம்
பெற்று நிற்கும்
அவர்தம்
அற்புத சாதனைகளின் ரகசியம் நீ!
உடலெங்கும்
பூக்கும்
வியர்வை
முத்துக்கள்!
அவை எவராலும் மதிப்பிட இயலா
ஒப்பற்ற
சொத்துக்கள்!
உழைப்பே தருமாம் உயர்வு
என்றுன்னைப் போற்றுவதில்
என்ன வியப்பு!
என்றென்றும் மானுடர்க்கு
நீ தரும் பரிசே சிறப்பு!
-ரேணுகா சுந்தரம்