tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-18.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-18.04.25


  'கோவிந்தசாமி என்னும் இந்தியன்' என்ற சாந்தி ஜெயாவின் சிறுகதை இலங்கையில் நடைப்பெறுவதைப் போல இருந்தது மாறுதலாக இருந்தது. ரகு சுடுகாட்டில் ஐயாவின் உடலுக்கு சடங்குகள் செய்தபிறகு கடைசியாக சில்லறை காசுகளை அவர் மீது போடுமாறு சொன்னபோது, அவன் கையில் அகப்பட்ட இந்திய ஒரு ரூபாய் காசு, மனதில் பற்பல கதைகளை சொல்லியது!


  'செல்' பேச்சு கேட்கவா? என்ற பிரபாகர்சுப்பையாவின் சிறுகதையில் கமலேஷ் அடிக்கடி செல்பி எடுத்ததில் இப்படி ஒரு நல்ல நிகழ்வா? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருந்தாலும், ஏதோ துப்பறியும் கதைபோல சுவாரஷ்யமாக இருந்தது இந்த கதை! எப்படியோ மிகப்பெரிய திருட்டுக் கும்பலைப் பிடிக்க முக்கிய காரணமான கமலேஷை நானும் பாராட்டுகிறேன்!


  சிவ.முத்து லட்சுமணனின் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு படித்தேன். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர் ஒரு மன்னர் என்பதை அறிந்து வியந்தேன். இவரை வஞ்சகமாக சிவனடியார் வேடத்தில் வந்து கத்தியால் குத்திய முத்தநாதன் என்ற எதிரிநாட்டு மன்னனையும், பத்திரமாக வழி அனுப்பி வைத்து காப்பாற்றிய மெய்ப்பொருள் நாயனாரின் கருணை உள்ளம் மனதை நெகிழ வைத்தது.


  பத்திரிகை உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைத் தன்மைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்வின் வரலாறு சிறப்பாக இருந்தது. பிகார் மாநிலத்தில் பிறந்து, தொழில் செய்ய சென்னைக்கு வந்து, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடுகாட்டி அனைத்து மக்களிடமும் நன்றாக கலந்து பழகிய அவருடைய நல்ல உள்ளம், அவரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கியது என்பது மகிழ்ச்சியான தகவல். அதன்பிறகு பத்திரிகைத்துறைக்கு வந்து சுதந்திரத்திற்கும் நடுநிலைத் தன்மைக்கும் சான்றாக அவர் வாழ்ந்தார் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும்!


  விதம் விதமாக பல்சுவை அற்புதங்களாக புதுக்கவிதை பகுதியில் கிட்டத்தட்ட நாற்பது கவிதைகள். அதிலும் 'பருகியது அழகை... அவள் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சி!' என்ற ரிஷிவந்தியாவின் ஆறுவார்த்தை கவிதை, இப்போதும் என் மனதில் பட்டாம்பூச்சியாக பறந்துக்கொண்டிருக்கிறது.


  மண்பானை சமையல் ஆரோக்கியமானதுதான்! ஆனாலும் யார் சார் இப்போதெல்லாம் மண்பானையில் சமைக்கிறார்கள்? நகரங்களில் பொங்கல் விழாவின் போதுகூட பல இடங்களில் கியாஸ் அடுப்பில் குக்கரை அதன் மீது வைத்து, குக்கரின் கழுத்தில் மஞ்சள் கொத்தைக்கட்டி, அது விசிலடிக்கும்போது "பொங்கலோ.. பொங்கல்" என்கிறார்கள்!


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.