ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுப்பதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் பதவியேற்புக்கு பிறகு நடைபெற்ற முதல் அமைச்ச ரவை கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதோ பாருங்கள், நான் நேரடியாகவே பேசுகின்றேன், அமெரிக்காவைத் திருடுவதற்காக தான் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கமே நம்மை குடைந்து திருடுவது தான்.
அவர்கள் அதை நன்றாகவே செய்திருக்கிறார் கள். ஆனால் இப்போது நான் ஜனாதிபதியாகி விட்டேன் என தெரிவித்தார். தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் அமெரிக்காவை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பாவின் நோக்கம் நியாயமற்ற முறையில் இருக்கிறது என்ற தொனியில் பேசிய அவர் சீனா, கனடா, மெக்சிகோ மீது வரி விதித்தது போல ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு ஐரோப்பிய நாட்டின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய தடையற்ற சந்தையாகும். இந்த சந்தை அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று ஐரோப் பிய ஆணையத்தின் சில முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மீது வரி விதிக்கப்பட்டால் “உறுதியாகவும் உடனடியாகவும்” பதிலடி நடவடிக்கைகளை எடுப் போம் என ஐரோப்பிய ஒன்றிய ஆணைய அதிகாரிகள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் மக்களுக்கும் வணிகங்களுக்கும் இந்த சுதந்திரமான தடையற்ற சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் எதிராக இருக்கக் கூடாது என ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது. தற்போது டிரம்ப்பின் இந்த பேச்சு முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு பின் அமெரிக்காவின் பொருளாதார நலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 2024 இல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள 27 நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 235.6 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட அந்நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வது தான் மிக அதிகமாகும்