சென்னை:
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்த நிலையில் 19-வது ஓவரை வீசிய யுவேந்திர சாஹல் கடைசி 3 பந்துகளில் தீபக் ஹூடா (2), அன்ஷுல் கம்போஜ் (0), நூர் அகமது (0) ஆகியோரை ஆட்டமிழக்கக் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிட் விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றார். இந்த ஓவரின் 2-வது பந்தில் எம்.எஸ்.தோனியையும் (11), சாஹல் அவுட்டாக்கியிருந்தார். ஒட்டுமொத்தமாக 3 ஓவர்களை வீசிய யுவேந்திர சாஹல் 32 ரன்களை வழங்கி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2022-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில் யுவேந்திர சாஹல் இணைந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா முதலிடத்தில் உள்ளார். அவர் 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். அடுத்த இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார். அவர், 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 2 ஓவர்களில் 23 ரன்களை தாரை வார்த்த யுவேந்திர சாஹல், 19-வது ஓவரில் ஆட்டத்தின் போக்கையை மாற்றினார். இந்த ஓவரில் அவர் கைப்பற்றி ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்கள்தான் சிஎஸ்கே அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது. ஏனெனில் ஒரு கட்டத்தில் அந்த அணி 220 ரன்கள் வரை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு சாஹல் தனது சுழலால் முட்டுக்கட்டை போட்டார்.
ஹாட்ரிக் சாதனை படைத்தது குறித்து யுவந்திர சாஹல் கூறும்போது, “எம்.எஸ்.தோனி, ஷிவம் துபே ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் அந்த ஓவரில் எனக்கு விக்கெட் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் எனக்கு எதிராக சிக்ஸர் அடிப்பார்களா என்று நான் பெரிதாக யோசிக்கவில்லை, நான் எனது சிறந்த பந்துவீச்சை வீச திட்டமிட்டேன், எனது லைன்களை மாற்றிக்கொண்டே இருந்தேன். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் ஒதுக்கீட்டை முடித்த பிறகு நான் 19 அல்லது 20 வது ஓவரை வீசுவேன் என்று எனக்குத் தெரியும்.
எனவே நான் அதற்கேற்ப தயாராகி வந்தேன். வேகப்பந்து வீச்சாளர்கள் வேகம் குறைத்து வீசிய பந்துகள் சரியாக மட்டைக்கு வராமல் இருந்ததை பார்த்தேன். ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றுவது பற்றி நான் நினைக்கவில்லை. நூர் அகமது என்னுடைய பந்தை அடிக்க முயற்சிப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் அடித்தாலும் பரவாயில்லை என்று நான் நினைத்தேன்” என்றார்.
34 வயதான யுவேந்திர சாஹல் நடப்பு சீசனில் முதல் 5 ஆட்டங்களில் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் 2 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியிருந்தார். ஆனால் அதன் பின்னர் 4 ஆட்டங்களில் 14 ஓவர்களை வீசி ஓவருக்கு சராசரியாக 7.64 ரன்களை மட்டுமே வழங்கிய நிலையில் 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.