அசாமின் கோக்ரஜாரில் ராணுவம் குவிப்பு - வன்முறையின் பின்புலம் என்ன?

அசாமின் கோக்ரஜாரில் ராணுவம் குவிப்பு - வன்முறையின் பின்புலம் என்ன?


 

கோக்ரஜார்: அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போடோ சமூக மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடையே மோதல் வெடித்துள்ள பதற்றமான பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ராணுவ வீரர்கள் நேற்று இரவு கரிகாவ்ன் மற்றும் அதன் அருகிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இன்று அப்பகுதியில் ராணுவத்தின் கொடி அணிவகுப்பும் நடத்தப்படும். தற்போது மொத்தம் நான்கு ராணுவப் படைப் பிரிவுகள் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.


தற்போது, கோக்ரஜார் மற்றும் அண்டை மாவட்டமான சிராங்கில் ஒட்டுமொத்த சூழ்நிலையும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


அசாமில் நடந்த கும்பல் வன்முறை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, ராணுவத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவு அதிரடிப் படை களத்தில் இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.


பின்னணி என்ன? - திங்கட்கிழமை (ஜனவரி 19) இரவு, கரிகாவ்ன் பகுதியில் உள்ள மான்சிங் சாலையில், மூன்று போடோ சமூகத்தினர் பயணித்த ஒரு வாகனம் இரண்டு பழங்குடியினத்தவர் மீது மோதியது.


இதனையடுத்து அந்த மூன்று போடோக்களும், அந்த பழங்குடி கிராம மக்களால் தாக்கப்பட்டதுடன், வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது.


இந்த தாக்குதலில் வாகனத்தில் வந்த போடோ சமூகத்தை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) உயிரிழந்தார். மேலும், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, நேற்று (ஜனவரி 20) போடோ மற்றும் பழங்குடி சமூகத்தினர் கரிகாவ்ன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து, டயர்களை எரித்து, ஓர் அரசு அலுவலகத்துக்கு தீ வைத்து, கரிகாவ்ன் காவல் புறக்காவல் நிலையத்தைத் தாக்கியதால் நிலைமை மோசமடைந்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர். இதில் சில காவல் துறை அதிகாரிகள் உட்பட பலரும் காயமடைந்தனர்.


கரிகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த பலரும் தாக்குதல்களுக்கு அஞ்சி தப்பி ஓடியதைத் தொடர்ந்து, கோக்ராஜார் மாவட்ட நிர்வாகம் கரிகாவ்ன் உயர்நிலைப் பள்ளி மற்றும் குவாஜன்புரி அமன்பாரா உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎன்எஸ் பிரிவு 163-இன் கீழ் கோக்ராஜார் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோக்ராஜார் மற்றும் சிரங் மாவட்டங்களில் இணையம் மற்றும் செல்போன் சேவைகளையும் உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%