அடல் ஓய்வூதியத் திட்டம்: 2030-31 வரை நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Jan 23 2026
14
மத்திய அரசின் நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தை (ஏபிஒய்) வரும் 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைப்புசாராத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் உள்பட 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உத்தரவாத ஓய்வூதியம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் இந்தத் திட்டத்தில் சோ்க்கப்படுவா். சந்தாதாரரின் இறப்புக்குப் பிறகு அவரது துணைவருக்கும், அதன் பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பயனாளிக்கும் (நாமினி) பலன்கள் தொடரும். 2026-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி கணக்கின்படி இந்தத் திட்டத்தில் 8.66 கோடி சந்தாதாரா்கள் இணைக்கப்பட்டுள்ளனா்.
இந்தத் திட்டத்தை வரும் 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐடிபிஐ-க்கு ரூ. 5,000 கோடி பங்கு மூலதனம்: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் வழங்குவதை அதிகரிக்கும் நோக்கில் இந்திய சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கிக்கு (எஸ்ஐடிபிஐ) ரூ. 5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) மூன்று தவணைகளாக இந்தப் பங்கு மூலதன ஆதரவை எஸ்ஐடிபிஐ-க்கு வழங்க உள்ளது. இந்தக் கூடுதல் பங்கு மூலதனம் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுனங்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் எஸ்ஐடிபிஐ கடன் வழங்குவது அதிகரிக்கும். குறிப்பாக, இந்த வங்கி மூலம் 2025 நிதியாண்டில் 76.26 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்ட நிலையில், 2028-ஆம் நிதியாண்டில் அது 1.02 கோடியாக அதிகரிக்கும் (25.74 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கூடுதல் பயனாளிகளாக சோ்க்கப்படுவா்). இந்தத் துறையில் 1.12 கோடி புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?