"அத்தே..பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..நம்ம தெருக்காரங்களை விட்டு நகர்ந்து போயிடாதீங்க... கூட்டத்துல காணாம போயிட்டீங்களோ.... உங்க மகனுகிட்ட நான் அப்புறம் வாழவே முடியாது..அதுவும் உங்க பேத்திங்க என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாளுவோ... நானும் இந்த பாழாப்போன ஊருல உங்க தயவு இல்லாம குப்பைக் கொட்டுறதும் இயலாத கதை..பதனமா பாத்து வந்து சேருங்க.." பொய் கரிசனத்துடன் பேசியபடியே அருகில் வந்து.."இந்த புடவை உங்களுக்கு எடுப்பா இருக்கு அத்தே..!"என்றபடி மாமியாருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டாள் மணிமேகலை. மருமகளின் இருட்டுப்புத்தி புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்து மழுப்பி கையசைத்து நின்றார் சாரதாம்மாள். தாழம்புதூர் கிராமத்தில் 'கோமுநக' கட்சியின் மாநாட்டுக்கு ஆள் பிடிக்கும் கும்பல் ஏழெட்டு குட்டியானைகளோடு வந்து முகாமிட்டு ...தலைக்கு ஐநூறு பணமும்...கட்சிக்கொடி பார்டர் புடவைகள்.. வேட்டிகளையும் விநியோகித்து ... ஆள்களை அள்ளித் திணித்துக் கொண்டிருந்தனர். மணிமேகலைக்கு முதலில் மாமியாரை மாநாட்டுக்கு அனுப்பும் திட்டம் இல்லாமல் தான் இருந்தது.சும்மா வேடிக்கை பார்க்கலாம் என்றுதான் சந்தைத் திடலுக்கே வந்தாள். இங்கு கட்சிக்காரர்கள் விநியோகித்த சலவைத்தாள்களும்.. கஞ்சிக்கருக்கு குலையாத புடவைகளும் லேசாக ஆசையை கிளறின. 'மூட்டை முடிச்சு...வைக்கோல் கட்டுகள்..ஏன் சந்தைக்கு ஆடு..மாடுகள் தான் இப்படி வரன்முறையில்லாம ஏத்துவாங்க..ஒரே குட்டியானையில இருவத்தஞ்சு..முப்பது பேரை திணிச்சி கொண்டு போறாங்களே..'என ஆதங்கத்தோடு பார்த்து நின்றவளுக்குள் பேராசை பூதம் கிளம்பி புத்தியைக் கெடுத்தது. சமீபத்திய ஒரு கட்சியின் மாநாட்டு நிகழ்வும்..அதற்கு பரிகாரமாக அந்தக்கட்சியும்..அரசும் நிவாரணமாய் அறிவித்த பெருத்த தொகைகளும்.. அவளது பணச்சபலத்தை அதிகரித்தன. அவள் பார்வையில் புருஷன் காரனோ அத்தக்கூலி...அள்ளை கொள்ளை அடித்து அனுதினமும் ஆயிரம்..ரெண்டாயிரம் சாமார்தியம் செய்ய துப்பில்லாதவன்.. வீட்டில் மூன்றும் பெண் பிள்ளைகள்..இவள் விவசாயக்கூலி வேலைக்கும்..அவ்வப்போது நூறுநாள் வேலைக்கும் செல்வதைத் தவிர..வேறு வருமான வழிகளும் இல்லை..'கை கால் சோராத வரைக்கும் உழைச்சி கஞ்சிஊத்தி காவந்து பண்ணிடலாம்.. கரைசேர்க்க வழி என்னவோ...'என புலம்பாத நாளில்லை..இப்போது மின்னலாக ஒரு வழி புலப்பட அதை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துவிட்டாள் மணிமேகலை. 'கல்லெறிந்து பார்ப்போம் பழம் விழுந்தால் பெருத்த லாபம்.. இல்லாவிட்டாலும் பங்கமில்லை... கைமேல் பலனாக ஐநூறு ரூபாய் கிடைத்துவிட்டது.. கட்சிக்காரன் தயவில் புதுச்சீலையும் கிழவிக்கு கிடைத்தது.தீபாவளி பட்ஜெட்டில் முந்நூறை மிச்சப்படுத்திவிடலாம்.'பெருமூச்சோடும்... நமட்டுச்சிரிப்போடும்..வீட்டை நோக்கி நடந்தாள் மணிமேகலை. மாலை மங்கி விளக்கேற்றியவுடன் ..வழக்கமாக டீவியில் சீரியல் பார்ப்பவள்..இன்று...'ஸ்கூப் ..ஸ்கூப்' என ஸ்குரோலிங்கில் கூவும்..செய்திச்சேனல்களில் அலைபாய்ந்தாள்.. ஆரவாரத்துடன் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததே தவிர..அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவே இல்லை..எரிச்சலோடு அமர்ந்திருந்தாள் அவள். "அம்மா..நம்ப ஆச்சி வீட்ல இருந்து ஃபோன்.." என்றபடி ஓடிவந்தாள் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த மூத்தமகள். வாங்கி காதில் வைத்தவள் .."சொல்லும்மா..எப்டி இருக்க.?!"என்றாள். "அண்ணீ..நான் பிரபா பேசறேன்..அத்தைய ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம்.. இப்பவே கிளம்பி வாங்களேன்..எனக்கு படபடப்பா இருக்கு." என்றாள் தம்பி மனைவி. "ஏய்..அம்மாவுக்கு உடம்புக்கு என்ன..?..என்ன நடந்தது..சொல்லு.?.." எதிர்முனை சிறிது நேர மௌனத்திற்கு பிறகு.."அது வந்து அண்ணீ..நம்ம பக்கத்து ஊருல ஒரு குடும்பமே கந்துவட்டி கொடுமையில பாழாச்சுல்ல.. அதுக்காக கலெக்டர் ஆபீஸ் வாசல்ல மறியல் போராட்டம் பண்ண ஆள் வேணும்னு...தலைக்கு ஆயிரம் பேசி அழைச்சுகிட்டு போனாங்க..லோடு ஆட்டோ பாரம் தாங்காம..ரயில்வே ட்ராக்ல சிக்கி அவுந்துட்டுதாம்.. சீக்கிரம் வாங்க..". "அடியே..அதுக்கு எதுக்குடி எங்க அம்மைய அனுப்புன..நீ போக வேண்டியது தான..?" கூப்பாடு போட்டாள் மணிமேகலை. "என்ன பண்றது..அண்ணீ.. மாசத்துல பாதி நாள் திண்ணை தூங்கறாரு...உங்க தம்பி..மீதி நாள் வேலை கிடைச்சாலும்.. குடிக்கவும்..அவரு வாங்குன கைமாத்து கடனை அடைக்கவுமே பத்தமாட்டேங்குது..என் ஒண்டி உழைப்புல மூனு புள்ளைகளுக்கு கஞ்சி ஊத்தி..கந்தல் துணி தரலாம்..கரையேத்த வழிய சொல்லுங்களேன்... பார்ப்போம்..விழுந்தது தான் விழுந்ததே ..இந்த கேடுகெட்ட டெம்போ...ரயில் வரும்போது ட்ராக்குல மாட்டக்கூடாதா..." என்றபடி எதிர் முனை துண்டிக்கப்பட்டது. மணிமேகலை தனது மாமியாரை நயவஞ்சகமாக கூட்டத்திற்கு அனுப்பியதை பேத்திகள் மூலம் தெரிந்து கொண்ட மணிமேகலையின் தாய்..தனது மருமகள் மூலம் நாடகமாடி புத்திப் புகட்ட நினைத்தது மணிமேகலைக்கு தெரியவே இல்லை. அவள் மயங்கிச் சரிந்திருந்தாள்.* ----------
அரும்பூர்.க.குமாரகுரு,
மயிலாடுதுறை*