ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி: கபடியில் இந்திய அணிக்கு இரட்டை தங்கம்
Oct 27 2025
10
மனமா, அக்.25-
ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் இந்திய அணி இரட்டை தங்கம் வென்றுள்ளது.
3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில் கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆண்கள் பிரிவில் லீக் சுற்றில் வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஈரான், பக்ரைன், தாய்லாந்து அணிகளை அடுத்தடுத்து பந்தாடிய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 35-–32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இதேபோல் இந்திய பெண்கள் அணி இறுதி ஆட்டத்தில் 75-–21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை எளிதில் தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர், வீராங்கனைக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆசிய இளையோர் விளையாட்டில் இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றதை அறிந்து மகிழ்ந்தோம். பெண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவும், ஆண்கள் அணியில் அபினேசும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. அபினேஷ் தேனியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்’ என்று பாராட்டியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?