ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025 கிராஸ் ஓவர் ஆட்டத்தில் பெல்ஜியம், நெதர்லாந்து அபார வெற்றி
21 வயதிற்குட்பட்டோருக் கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று கிராஸ் ஓவர் ஆட்டம் நடைபெற்றது. இதில் 4ஆவது இடத்திற்கு தகுதி பெற வேண்டிய முதல் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் - பிரான்ஸ் அணிகள் (சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில்) மோதின. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 4ஆவது இடத்திற்கு தகுதி பெற வேண்டிய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட பிரான்ஸ் அணி 7ஆவது இடத்திற்கு தகுதி பெற வேண்டிய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு கிராஸ் ஓவர் ஆட்டத்தில் (4ஆவது இடத்திற்கு) நெதர்லாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபார வெற்றி பெற்று 4ஆவது இடத்திற்கு தகுதி பெற வேண்டிய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட நியூஸிலாந்து அணி 7ஆவது இடத்திற்கு தகுதி பெற வேண்டிய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 4ஆவது இடத்திற்கான ஆட்டத் திற்கு நெதர்லாந்து, பெல்ஜியம் பலபரிட்சை நடத்துகிறது.
மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025
மகளிர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி தொட ரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டி யாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் 7ஆவது நாளான ஞாயிறன்று நடை பெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜிம்பாப்வே அணிகள் (குரூப் பி) மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணி முதல் கால்பகுதியில் 7 கோல்கள், 2ஆவது கால் பகுதியில் 5 கோல்கள், 3ஆம் கால் பகுதியில் 6 கோல்கள் மற்றும் கடைசி கால் பகுதியில் 3 கோல்கள் என மொத்தம் 21 கோல்கள் அடித்து, 21-0 என்ற கணக்கில் மாபெரும் வெற்றியை ருசித்தது பெல்ஜியம் மகளிர் அணி. மேலும் மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி பெருமையையும் பெற்று பெல்ஜியம் புதிய வரலாறு படைத்தது. 35ஆவது லீக் ஆட்டத்தில் கனடா அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி சூப்பர் (குரூப் இ) வெற்றியை ருசித்தது. தொடர்ந்து நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 8-0 என்ற கோல் கணக்கில் (குரூப் பி) வேல்ஸ் அணியை வீழ்த்தியது.