news Breaking News
clock

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., வீட்டில் கொள்ளை அடித்த 4 பேர் கைது

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., வீட்டில் கொள்ளை அடித்த 4 பேர் கைது

தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி.,யின் வீட்டில் 87 பவுன் நகைகளை கொள்ளை அடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ். விஜயன். இவர் திமுக சார்பில், நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1999, 2004, 2009 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே, சேகரன் நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவியும், மகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவ.28 ஆம் தேதி இரவு ஏ.கே.எஸ். விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளை அழைத்துக் கொண்டு சித்தமல்லியில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர், கடந்த டிச.1 ஆம் தேதி ஏகேஎஸ். விஜயன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, ஏ.கே.எஸ். விஜயன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முன்னாள் எம்பி.,யின் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, மகன்கள், மகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படையினர் விரைந்து சென்று ராயல் நகரை சேர்ந்த சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகியோரை தஞ்சாவூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளையடித்தது மேற்கண்ட 4 பேரும்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 87 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதே குடும்பத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரை தேடி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News