ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு; உற்பத்தி மும்மடங்கு அதிகரிப்பு: நீலகிரி மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி
நீலகிரி, ஆக. 21–
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் மானியத்தில் வழங்கப்பட்ட தேயிலை அறுவடை இயந்திரம் மூலம் பயனடைந்த விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,54,484.94 ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. தோட்டப்பயிர்களான தேயிலை, காபி மற்றும் பாக்கு போன்றவை 63926.36 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
1,185 விவசாயிகள் பயன்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகள் 44,000 பேர் தேயிலை பயிரிட்டு வருகின்றனர். தேயிலை விவசாயிகளுக்காக தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மற்றும் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத்திட்டத்தின் கீழ் அறுவடை பின்சேர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் மூலம் 2022-–23 ஆம் நிதியாண்டில் தேயிலை அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்க தொடங்கப்பட்டது.
பேட்டரி மூலம் இயங்க கூடிய கிசான் ரக்சான் மாடல் கேஆர் 300ஏ தேயிலை அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.16,000-மும், பீஜீஸ் மாடல் எல்எஸ் -500 தேயிலை அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.18,000 -மும், ஆகும். 2024–-2025 ஆம் ஆண்டில் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு குறு விவசாயிக்கு 70 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்திலும் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2023 முதல் 2025 வரை ஆதிதிராவிடர், பொது பிரிவினர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ரூ.99 லட்சம் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயி ஆர்.குமார், ஜெகதளா (கோத்தகிரி):
“கையால் பறிக்க ஒருவரால் ஒரு நாளில் அதிகபட்சம் 30–50 கிலோ மட்டுமே எடுக்க முடியும். கூலி ரூ.350 அல்லது கிலோவிற்கு ரூ.7. ஆனால் இயந்திரத்தின் மூலம் ஒருவரால் தினமும் 200–230 கிலோ வரை எடுக்க முடிகிறது. மானியத்தில் ரூ.4,800க்கு வாங்கிய இயந்திரம் மூலம் மும்மடங்கு லாபம் கிடைக்கிறது. பராமரிக்க எளிது. இது எனக்கு பெரும் உதவியாக உள்ளது.” என தெரிவித்தார்.
விவசாயி கதிர்வேல் கூறும்போது,
“முன்பு கையால் பறிப்பதால் 30–50 கிலோ மட்டுமே கிடைத்தது. கூலி ரூ.400 அல்லது கிலோவிற்கு ரூ.8–10 செலவாகியது. இப்போது மானியத்தில் ரூ.4,800க்கு வாங்கிய இயந்திரத்தின் மூலம் தினமும் 200–250 கிலோ வரை பறிக்கிறேன். ஆட்கள் தேவையில்லை, லாபம் அதிகரித்துள்ளது. முதலமைச்சருக்கு நன்றி.” என அவர் தெரிவித்தார்.