ஆண்டுக்கு 1.5லட்சம் மின்சார கார்கள் தூத்துக்குடியில் உற்பத்தி துவங்கியது
தூத்துக்குடி, ஆக.5-
தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'வின்ஃபாஸ்ட்' கார் உற்பத்தி தொழிற்சாலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மின்வாகன உற்பத்தியின் தலைநகராக தமிழ்நாடு மாறி விட்டது என முதல்வர் பெருமையுடன் கூறினார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட்டில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. , ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க, தமிழக அரசுடன் அந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
உற்பத்தி துவக்கம்
இந்த தொழிற்சாலை கட்டுமானப் பணிகளுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இதை யடுத்து தற்போது முதற்கட்டமாக, ரூ.1,119.67 கோடி மதிப்பீட்டில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் வியட்நாமில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும அவர் வழங்கினார்.
நம்பிக்கைக்கு நன்றி
விழாவில் முதல்வர்ஸ்டாலின் பேசியதாவது-
தெற்காசியாவின் பெரிய தொழில் நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது பெருமையாக இருக்கிறது. வியட்நாம் என்றாலே வியப்புதான். அந்த நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், அடிக்கல் நாட்டி 17 மாதங்களில் தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தைத் தொடங்கி நமக்கு பெருமை சேர்த்திருக்கிறது. மின்னணு வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு நன்றி.
இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாடு தான் இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் கேப்பிட்டல் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.
தலைநகரம் ஆனது
ஸ்ரீபெரும்புதூரில் முதல் கார் உற்பத்தி தொடங்கியது போல, தூத்துக்குடியில் மின் வாகன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு-வியட்நாம் இடையேயான வர்த்தக பொருளாதார வளர்ச்சி மேம்படும். 2024 ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,500 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற முறையில், இந்த உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து, 17 மாதங்களில் இந்த நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதனால், தூத்துக்குடி மட்டுமல்ல, தென்மாவட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். ஆகையால், இந்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள். தமிழ்நாடு தான் மின் வாகனங்களின் தலைநகரம் என்று உலகத்திற்கு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்,
இவ்வாறு முதல்வர்பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி, வின்ஃபாஸ்ட் நிறுவன அதிகாரிகள், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.