ஆந்திராவில் மதுபான ஆர்டர் பெற கைமாறியது ரூ.218 கோடி

ஆந்திராவில் மதுபான ஆர்டர் பெற கைமாறியது ரூ.218 கோடி

அமராவதி :

ஆந்திராவில், 3,500 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கில், அரசு நடத்தும் மதுபானக் கழகத்திடம் இருந்து, 'ஆர்டர்'களை பெற, பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான, 'திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்' 218 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.



ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.



இங்கு 2019 - 24 மே வரை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார்.



குற்றப்பத்திரிகை


அப்போது, தனியாரிடம் இருந்த மதுக்கடைகள், ஆந்திர பிரதேச மதுபானக் கழகத்தின் கீழ் வந்தன. மேலும், பிரபலமில்லாத தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், 3,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



இது குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வரும் நிலையில், சமீபத்தில், விஜயவாடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.



அதில், 2019 - 24 வரையிலான காலத்தில், மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, மாதம் 60 கோடி ரூபாய் வரை மிரட்டி பெறப்பட்டது என, குறிப்பிடப்பட்டு உள்ளது.



இந்நிலையில், ஆந்திர மதுபானக் கழகத்திடம் இருந்து ஆர்டர்களை பெற, பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான, திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 218 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர்.



இதுகுறித்து போலீசார் கூறியதாவது:


ஆந்திர மதுபானக் கழகத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, ஏராளமான ஆர்டர்களை திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பெற்றது.



சொத்து விபரம்


இதன்படி அந்நிறுவனம், ஐந்து ஆண்டுகளில், 1,472 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. மதுபானங்களின் அளவு மற்றும் விலை அடிப்படையில், 218 கோடி ரூபாயை லஞ்சமாக, 'சிண்டிகேட்' உறுப்பினர்களுக்கு அந்நிறுவனம் வழங்கி உள்ளது.



அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், சில சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை கண்டுபிடித்தோம்.



ஆந்திர மதுபானக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தை, திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரொக்கமாகவே வைத்திருந்தது.



அந்த பணத்தில் நகைகளை வாங்கிய அந்நிறுவனம், சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கொடுத்தது. அந்நிறுவனத்தின் அனைத்து சொத்து விபரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%