இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி


சங்கீத சமுத்திரத்தில் முழுமையாக மூழ்கி முத்தெடுத்தச் சிலரில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் என்றால் மிகையாகாது.


தேன் கலந்து குழைத்து தரும் தெய்வீக குரலுக்குச் சொந்தமானவர் அல்லவா அவர்! இந்திய மொழிகளில் அநேக மொழிகளில் பாடியிருப்பது ஒரு மாபெரும் சரித்திரம். இவரே முதலானவரும் கூட.


1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகத் தோன்றியவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார். அது ஒரு சுவாரசியமான நிகழ்வு. இங்கே குறிப்பிட வேண்டும்.

தந்தையை இழந்த நிலையில், தாயாரால் கச்சேரி நடக்கும் இடத்துக்கே அழைத்துச் செல்லப்பட்ட காலங்களில், கச்சேரி மேடைகளில் ஓரமாக இருக்கச் சொன்ன நேரத்தில் பத்துவயது சுட்டிக் குழந்தை வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருக்க, கவலையும் பதற்றமும் கொண்ட தாய் சண்முகவடிவு அவளை அழைத்து தன்னுடன் அமரச் செய்து, "நீ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம்" எனச் சொல்ல, 'மரகத வடிவம்' என்ற செஞ்சுருட்டி ராகப் பாடலைப் பிசறாமல், உச்சஸ்தாயியில் பாடி அசத்தினார். அப்போது அவருக்கு எட்டு வயதுதான். அந்தப் பாட்டு சண்முக வடிவு அவர்களின் வீணை இசையுடன் சேர்ந்து வெளிவந்தது. 'தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி' மூலம் வெளிவந்த எம்.எஸ்ஸின் முதல் இசைத்தட்டாகும்.


இவருக்கு சக்திவேல் பிள்ளை என்ற அண்ணனும், வடிவாம்பாள் என்ற தங்கையும் இருந்தனர். அண்ணன் சக்திவேல் ஒரு மிருதங்கக் கலைஞர். எம்.எஸ் அம்மாவிற்கு பல கச்சேரிகளுக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார்.


1935ல் மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் இவரது கச்சேரி நடந்தது. அந்த ஆண்டே மைசூர் மகாராஜாவின் அவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாளுடன் இணைந்து இவர் பாடியது இவரது சிறந்த கச்சேரிகளில் ஒன்றானது. தென்னிந்தியாவின் எல்லா இடங்களிலிருந்தும் எம்.எஸ்ஸிற்கு அழைப்புகள் வரத் தொடங்கின.


அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேசப் பட்டரிடம் அநேக காலம் இசை பயின்றார். பிறகு செம்மங்குடி சீனிவாசய்யர் பிரதான குருவானார். கடையநல்லூர் வெங்கட்ராமன் இவரின் கடைசி குரு ஆவார்.


அன்னமாச்சார்யாவின் அற்புத கீர்த்தனங்களை டி.பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கற்றுக் கொண்டார்.

முத்துஸ்வாமி தீக்ஷதர் கிருதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல்.வெங்கட்ராமய்யரிடம் கற்றுக் கொண்டு பாடினார். மிகவும் பெருமைக்குரியது என்னவென்றால் மைசூர் வாசுதேவாச்சார் அவர்கள் தாங்கள் இயற்றிய பாடல்களை தாங்களே எம்.எஸ்ஸுக்குக் கற்றுக்கொடுத்தார்.


திரைப்படத்திலும் இயக்குநர் கே.சுப்ரமண்யத்தின் 'சேவா சதனம்' (1938) என்ற படத்தில் தானே பாடிக்கொண்டும் நடித்தார். பிறகு 'சகுந்தலை', 'சாவித்திரி', 'மீரா' என்ற படங்களில் நடித்தார். இவரது காந்தக் குரலில் அமைந்தப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.


இவரது 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல் இன்றளவும் பிரசித்தம்.


சேவா சதனம் படப்பிடிப்பின்போது டி.எஸ்.சதாசிவம் அவர்களுடன் நடந்த சந்திப்பு திருமணத்தில் முடிந்தது. திருநீர்மலைக் கோவிலில் எளிய முறையில் நடந்தது.


சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்றவர்களுடைய எண்ணற்றத் தமிழ்ப் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் பதியவைத்தப் பெருமை எம்.எஸ்.அம்மாவையே சாரும்.


1966ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் எழுதி, ஹாண்டல் மேனுபல் இசையமைத்த 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்ற ஆங்கிலப் பாடலை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஐ.நா.சபையில் எம்.எஸ்.பாடினார்.


அதே நாளில் காஞ்சி பரமாச்சார்யாள் எழுதிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பாடலையும் பாடினார்.


மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை எல்லா தேசத்தலைவர்களும் எம்.எஸ் அவர்களின் இசைக்கு ரசிகர்கள் என்றால் மிகையாகாது.


'வைஷ்ணவ ஜனதோ', 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற பாடல்கள் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்களாகும்.


ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் போன்ற பெரும்பாலான ஸ்லோகங்களை, மீரா பஜன்ஸ், மும்மூர்த்திகள் கிருதிகள் என சங்கீத சாம்ராஜ்யத்தில் ஒரு மகா ராணியாக வலம் வந்து மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்தவர்.


பரணி நக்ஷத்திரத்தில் பிறந்த இவர், தன் இசையால் தரணியை ஆண்டார் என்பதில் ஐயமில்லை.


வித்வான்கள் 'ராகம் தானம் பல்லவி' பாடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்தவர் இவர். இதனாலேயே இவருக்கு 'மாக்சேசே' விருது தரப்பட்டது.


1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.எஸ் அவர்களின் அன்புக் கணவர் மரணம் அடைந்தார். அதன் பிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்டார்.


1954ல் பத்ம பூஷன், 1956 ல் சங்கீத நாடக அகாடமி விருது, 1968ல் சங்கீத கலாநிதி, 1975ல் பத்ம விபூஷன், 1998ல் பாரத ரத்னா போன்ற பல உயரிய விருதுகளுக்கு சொந்தமானவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.


அன்பு, அமைதி, ஆற்றல் நிறைந்த நம் இசைக்குயில்

மெல்ல வைரஸ் நோயால் அவதியுற்றார். பின்னர் எம்.எஸ் தனது 88ஆவது வயதில் டிசம்பர் மாதம் 11ம் தேதி அதிகாலை இவ்வுலகைப் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். இசைக்குயில் காற்றோடு கலந்தார். மக்களின் மனங்களில் நிலையான இடம் பிடித்தார். அன்னாரின் நினைவு நாளான இன்று அவரின் அருமை பெருமைகளில் ஒரு சிலவற்றை பகிர்ந்து கொண்டதில் திருப்தி.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%