இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Oct 30 2025
11
சென்னை: டெங்குவால் இந்தாண்டு 1,500 பேர் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நீலாங்கரையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி 20 வார்டுகள் கொண்டுள்ள மிகப்பெரிய தொகுதி. முதல்வர் எடுத்த பிரத்யேக நடவடிக்கைகளால், புதிய மழைநீர் வடிகால்வாய்கள் ஏராளமாகக் கட்டப்பட்டன. நாராயணபுரம் ஏரி உபரிநீரால் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகள் ஆண்டுதோறும் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இன்று அந்தப் பகுதிகளில் புதிய இணைப்புக் கால்வாய்கள் கட்டியதால் அந்தப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 2012-ல் 66 பேர், 2017-ல் 65 பேர் இறந்துள்ளனர். இதுதான் அதிக பட்ச உயிரிழப்புகள். இந்த அரசு அமைந்த பின் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலேயே டெங்கு இறப்பு உள்ளது. பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1500-ஐக் கடந்திருக்கிறது.
ஆனால் உயிரிழப்பு என்பது இந்தாண்டு இதுவரை 9 பேர் மட்டுமே. அதுவும், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்தவர்கள்தான் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார் இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தெ.பாஸ்கரபாண்டியன், மகேஸ்வரி ரவிக்குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?