செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Oct 30 2025
12
சென்னை: பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் அடிப்படையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அந்தவகையில், 5 விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைந்து, இயக்கப்பட உள்ளன.
இதன்படி, தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 அடுக்கு மற்றும் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும், இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் என 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயிலில் நவ.1-ம் தேதி முதலும், செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் நவ.2-ம் தேதி முதலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் தலா ஒரு ஏசி இரண்டடுக்கு மற்றும் ஒரு பொதுப் பெட்டியும், இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.2-ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து நவ.3-ம் தேதி முதலும் இணைத்து இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.3-ம் தேதி முதலும், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் நவ.4-ம் தேதி முதலும் இணைக்கப்பட உள்ளன.
இதுதவிர, சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?