இந்த ஆண்டில் ரூ.17 ஆயிரம் கோடி பயிர் கடன்: கேழ்வரகு உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஆக.24-–
கேழ்வரகு உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்றும், இந்த ஆண்டில் ரூ.17 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-– பயிர்க்கடன்களைப் பெறு வதற்காகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு இனி விவசாயிகள் நேரில் செல்லத் தேவையில்லை. இணையவழியில் விண்ணப்பிக்கலாம், கடன் கோரி இணையத்தில் விண்ணப்பித்த அன்றைய தினமே அவர்களுக்குக் கடன் கிடைத்துவிடும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.
அதேபோல், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுசங்கங்கள் மூலமாக நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிட பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்சமாக மூன்று லட்சம் ரூபாய் வரைகடன் பெற்று, அதனை ஓர் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்ற நடைமுறையும் இருக்கிறது.
கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 62 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17.37 லட்சம் விவசாயிகள் பெற்று பயன் அடைந்தார்கள். 4.43 லட்சம் பேருக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்புப் பிரிவின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்படும். 3 ஆயிரம் கோடி ரூபாய் கால்நடை பிரிவின் கீழ் கடன் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
விவசாய சாகுபடி பாசனப்பரப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 457.08 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. 2020-–2021-ம் ஆண்டில் எக்டருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானியப்பயிர்களின் உற்பத்தித் திறன் 2023-–2024-ம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது.
கேழ்வரகு உற்பத்தித்திறனில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித்திறனில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தித்திறனில் மூன்றாம் இடம் என்ற அளவில் அகில இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
பல மாநிலங்களில் விவசாயிகள் போராடிவரும் சூழ்நிலையில் போராட வேண்டிய அவசியமே இல்லாதவாறு விவசாயிகளுக்குத் தேவையான சலுகைகளை வழங்கி, அவர்களை மகிழ வைத்து விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் திராவிட மாடல் அரசுக்கு இணை இந்தியாவில் எங்கும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.