இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு
சென்னை, ஆக.24–
‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:–
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.இந்த அடிப்படையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் தரமான பள்ளிக்கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள்.
ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் !ரூ.660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன் !ரூ.658.17 கோடி நிதியுடன் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, ரூ.455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள், ரூ.352 கோடியில் 44 மாதிரி பள்ளிகள். ரூ.100.82 கோடியில் 28 தகைசால் பள்ளிகள் !79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடியில் கைக்கணினிகள்.
மேல்நிலைக் கல்வி, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு தனிக் கட்டணம் ரத்து, பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, முழு உடல் பரிசோதனை திட்டம், மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாத் திட்டங்கள், 3,043 முதுகலை ஆசிரியர்கள் 130 வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் உள்ளட்டவைகள் அடங்கும்.
ரூ.44 கோடி ஒதுக்கீடு
ரூ.660.35 கோடியில் இல்லம் தேடிக் கல்விஇந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம். இத்திட்டத்திற்கு 2021-–22 முதல் ரூ. 660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 2025–2026–ம் கல்வியாண்டில் ரூ.44.14 கோடி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வரும் 34,000 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 5.986 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
மாணவர்களின் நலனுக்காக 2023-–24 ஆம் கல்வியாண்டில், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை வெளியடப்பட்டன.
3,043 முதுகலை
ஆசிரியர்கள் நியமனம்
2021–2022 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2021–22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
2023–24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், காலை உணவுத் திட்டம், புதிய ஆசிரியர் நியமனங்கள், கல்விச் சுற்றுலா திட்டம் முதலிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.