சாலையோரக் கடை முன் நின்றிருந்தாள் அந்தச் சிறுமி.
கால்களில் செருப்பில்லை, கையில் பழைய அலுமினியக் கிண்ணம்.
“அம்மா… பிச்சை…” அவள் குரலில் சத்தமில்லை. பழகிப் போன வறுமையின் மெல்லிய கெஞ்சல்.
காரிலிருந்து இறங்கினாள் ஒரு பணக்காரப் பெண்மணி.
"பள...பள"க்கும் பட்டுப் புடவை, கனத்த கைப்பை, கழுத்தில் நகைக்கடை, கண்களில் அவசரம்.
சிறுமி அவளை நோக்கிச் சென்று பிச்சை கேட்க, ''ச்சை... சனியனே... போ…போ அந்தப் பக்கம்... !” முகம் சுளித்தபடி விரட்டியடித்தாள் பணக்காரப் பெண்மணி.
கிண்ணத்தைத் தாழ்த்திக் கொண்டு, அமைதியாய் நகர்ந்தாள் சிறுமி.
அதே நொடியில், எங்கிருந்தோ திடீரென்று வந்தான் அந்தத் திருடன். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்மணியின் கைப்பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
“ஐயோ! பிடிங்கோ!... பிடிங்கோ.."
பெண்மணியின் குரல் அதிர்ந்தது.
சாலையில் மக்கள் இருந்தும்,
எல்லோரின் கால்களும் பயத்தில் உறைந்தன.
திருடன் ஓடிய பாதையில்
நின்றிருந்தாள் சிறுமி.
அவன் அருகே வந்த நொடியில்,
அவள் தன் மெலிந்த காலை முன்னோக்கி நீட்டினாள்.
அவன் அந்தச் சின்னக் கால் தடுக்கியதில் தடுமாறி
தரையில் விழுந்தான்.
விழுந்தவன் தன்னை நோக்கி சிலர் வருவதை உணர்ந்ததும் கைப்பையைப் அங்கேயே போட்டு விட்டு, "தப்பித்தால் போதும்டா சாமி" என்கிற பாணியில் எழுந்து ஓடினான்.
சிறுமி அமைதியாக நின்றாள்.
பணக்காரப் பெண்மணி ஓடி வந்து தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள். கைகள் நடுங்கின.
மூச்சு வாங்கியது.
திரும்பி அந்தச் சிறுமியைப் பார்த்தாள்.
சிறுமி முகத்தில் வெற்றிப் பெருமிதமில்லை. இயல்பாயிருந்தாள்.
நேரே சிறுமியை நோக்கி வந்த அந்தப் பெண்மணி தன் கைப்பையைத் திறந்து, ஒரு பெரிய நோட்டை எடுத்தாள்.
“இந்தா … வாங்கிக்க.” என்றாள்
நன்றி சொல்லும் விதமாய்.
சிறுமி கிண்ணத்தை கீழே வைத்தாள்.
முதன்முறையாக அப்பெண்மணியை நேராகப் பார்த்தாள்.
“அம்மா… உதவி செய்யறதுக்கெல்லாம்
காசு வாங்கக் கூடாதும்மா.”
பெண்மணி உறைந்தாள். அந்த வார்த்தை அவள் வாழ்நாளில்
யாரும் சொல்லாத தீர்ப்பு.
சிறுமி மீண்டும் கிண்ணத்தை எடுத்தாள். நடக்க ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்மணி கைப்பையை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றாள். கைப்பை கனமாக இல்லை மனசுதான்…முதல் முறையாக கனத்தது.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?