உயர்கல்வியில் மாணவர் சேர்ப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்

பழனி, செப்.12-
தமிழகம் உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் பெற்று நாட்டிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமையுடன் கூறினார்.
பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சி கலெக்டர் சரவணன் முன்னிலையில் நடந்தது.இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
தமிழ்நாட்டை பலர் ஆண்டாலும், அவர்களால் அழிக்க முடியாத ஒன்றாக தமிழ்மொழி இன்றளவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் மொழி உணர்வு தான். மொழி வெறும் கருவி அல்ல. அது மனிதனின் பண்பு, அறிவு, உள்ளம், அனைத்தையும் வடிவமைக்கும் தன்மை கொண்டதாகும். 1970-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலமாக இருக்கும் என்று அறிவித்தார். கல்வி வளம் உள்ள நாடே வல்லரசாக முடியும் என்பது யுனெஸ்கோவின் அறிக்கை.
எனவே தான் முதல்வர் ஸ்டாலின் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவரும் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் பெற்று நாட்டிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீம் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கலைஞர் செம்மொழி விருது பெறும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தமிழ் மரபையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கேள்வி நேரத்தில் தரமான கேள்விகளை கேட்ட மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என பட்டம் சூட்டிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் ரவிசங்கர், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?