எட்டயபுரத்து எரிமலை

எட்டயபுரத்து எரிமலை


பாரதி!

நீ....பிறந்தபோது

தேவர்கள் உன்மேல்

பூமழை எதுவும் பொழியவில்லை.


அவதாரம் தோன்றியதாய்

வானில் அறிகுறி எதுவும்

தென்படவில்லை.


சுடு

சுள்ளிக்காட்டில்

முள்ளில் பூவாய்

நீ... மலர்ந்தாய்.


உன் பிறப்பு

தமிழைப் புதுப்பித்தது.


உன் எழுத்து

மொழியை உயிர்ப்பித்தது.


இலக்கணச் சிறை தகர்ந்து

இலக்கியம் சிறகடித்தது.


யாப்பின் பிடி விலக

மொழியின் மூப்பு

மூச்சு விட்டது.


அரசகுயிலாய்

அழுதிருந்த தமிழ்

குடிசைகளில்

பிள்ளைகளின் தாலாட்டாய்க்

குடி புகுந்தது.


காவலனுக்கே

கவரி வீசியத் தமிழணங்கு

முதன் முதலாய்ப்

பாமரனுக்கும்

விசிறியாகினாள்.


உன் எழுதுகோல்

செங்கோலையும்

பணிய வைத்தது.


அதிகாரங்களை

உன் காலடியில்

கனிய வைத்தது.


உலகையெல்லாம்

உன் வழியில்

இணையவைத்தது.


விடுதலையை உதிரத்தில்

பதிய வைத்தது.


நீ...

ஆயுதங்களின் முன்னேதான்

கந்தகமாய்க் கவிதை

ஏந்தினாய்.


எழுத்துக்களில்

அணுகுண்டை

ஒளித்து வீசினாய்.


புரட்சி செய்யத் தமிழனுக்குப்

புதிய ரத்தம் பாய்ச்சினாய்.


நீ...

சமூகத்தின் விடுதலைக்குச்

சாட்சியாகி

சாதிய மதம் கடந்து

பொதுமை பாடினாய்.


வாழ்க்கையை

வறுமைக்கு விற்று விட்டு

தமிழுக்குத் தாய்ப் பாலூட்டியப்

பாவலனே!


உன் நிறைவேறா

நெடுங்கனவு

இன்னும் மிச்சமிருக்கிறது


அக்னிக்குஞ்சுகளின்

அணைந்த கண்களுக்குள்

அணையாமல்.


*நறுமுகை.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%