சென்னை, ஆக.4-
கடற்கரை–-வேளச்சேரி வழித்தடம் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடற்கரை– -வேளச்சேரி இடையில் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரெயில் சேவை இயங்கி வருகிறது. நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பறக்கும் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். மொத்தம் 18 ரெயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வழித்தடம் 1997-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுபோக, பறக்கும் ரெயில் வழித்தடத்தை வேளச்சேரி–-பரங்கிமலை வரையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்க பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, பறக்கும் ரெயில் வழித்தடம் பராமரிப்புக்கு செலவு அதிகம் ஆவதால் புதிய மேம்பாட்டு பணிகளை தெற்கு ரெயில்வே செயல்படுத்தவில்லை. எனவே, சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்.ஆர்.டி.எஸ்.) எனப்படும் சென்னை பறக்கும் ரெயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
அதன்படி, பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் இணைக்கும் திட்டத்துக்கு ரெயில்வே வாரியம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல்கட்ட ஒப்புதலை வழங்கியது.
விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் பறக்கும் ரெயில் சேவையின் சொத்து, ரெயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை தமிழக அரசின் கீழ் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
பறக்கும் ரெயில் சேவை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த வழித்தடம் முழுமையாக மெட்ரோ ரெயில் கட்டமைப்புக்கு மாற்றப்பட இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகள் போன்று ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணி 2 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த வழித்தடம் அடியோடு மாற்றப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில் என்ன கட்டமைப்பில் இயங்கி வருகிறதோ அதே போல ரெயில் நிலையங்கள், ரெயில் இயக்கம், சிக்னல், தண்டவாளம், தொழில்நுட்பம், பாதுகாவலர் என அனைத்தும் அமையும். இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
வழித்தடம் ஒப்படைக்கப்பட்ட முதல் 2 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும். கட்டமைப்புகள் முழுமையாக மாற்றப்பட்ட பின்பு அதாவது 2028-ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்ப, நடைமேடை உயர்த்தப்படும். வாயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். இதற்காக வேளச்சேரியில் உள்ள புறநகர் ரெயில் பணிமனைக்கான இடம் மெட்ரோ ரெயில்களை பராமரிப்பதற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.