குழந்தைகளுக்கு வாசிப்பை பழக்குங்கள்..

குழந்தைகளுக்கு வாசிப்பை பழக்குங்கள்..



நான் ஒரு புத்தக விரும்பி ...எனக்கு மட்டுமல்ல அநேகருக்கு புத்தகம் என்பது உயிர் என்றால்..வாசிப்பு என்பது சுவாசம் போல...உடலின் பசிக்கு உணவென்றால்

அறிவுப் பசிக்கு புத்தகங்களே ..


ஒவ்வொரு புத்தகமும் ஒரு பொக்கிஷம் ..அறிவுப் பெட்டகம்.. அப்பெட்டகத்தை திறக்கும் சாவியே வாசிப்பனுபவம் ...


"பெண்களின் கையில் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் நாடு முன்னேறும்" என்றார் பெரியார் ..


"மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.." என்கிறார் வள்ளுவர் ..தோண்டும் போது ஊறும் நீர் போல கற்க,கற்க மனித அறிவு பொங்கிப் பெருகும் என்பது அவர் கணிப்பு. 


குழந்தைகளுக்கு சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ..பெற்றோரும் சரி பள்ளியிலும் சரி அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளமையிலேயே உருவாக்க வேண்டும்.


நான் பள்ளியில் படிக்கும்போது எங்களுக்கு லைப்ரரி கிளாஸ் என்று ஒரு வகுப்பு உண்டு அனேகமாக வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் இருக்கும் வகுப்பில் பள்ளி லைப்ரரி சென்று படிப்பதுடன் புத்தகங்கள் இரண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.அடுத்த வாரத்திற்குள் படித்துவிட்டு ரிட்டன் பண்ண வேண்டும். எனைட் பிளைட்டன் ..

கதைகளுக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு .


இந்த ஒரு வாரத்துக்குள்ளேயே சீக்கிரம் படித்து விட்டு புத்தகத்தை நண்பர்களுக்குள் மாற்றிக் கொள்வதுண்டு. போட்டி போட்டுக்கொண்டு படித்த காலம் அது ..அதுவே பின்னாளில் பழக்கமாகிப் போனது ..


எனவே தான் இதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் சிறுவயதில் நண்பர்களிடையே புத்தகங்கள் புழங்கும் போது நிறைய புத்தகங்கள் அவர்களுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு உண்டு. படிக்கும் பழக்கமும் எளிதில் வர நண்பர்களிடையே ஏற்படும் இந்த ஆரோக்கியமான அறிவுப்போட்டி ..உதவி செய்யும்.


இந்தக் காலத்தில் கடைக்கு வரும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான புத்தகத்தை குழந்தைகளை தேர்வு செய்ய விடாமல், இவர்களே தேர்வு செய்வதைப் பார்க்கும்போது ஒரு சிறு நெருடல் ஏற்படுகிறது. 


 புத்தகக் கண்காட்சியில் சந்தித்த இரு சிறுமிகள்( சகோதரிகள்) தங்களுக்கு பிடித்த புத்தகத்தை தாங்களே ஓடி ஓடி தேர்வு செய்து .."இதைப் படித்து விட்டோம் அதை படித்து விட்டோம்.. இது படிக்க வேண்டும்" என்று பேசிக் கொண்டதை பார்க்க மிகவும் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. அதுபோல படித்து முடித்த புத்தகத்தை ஏதேனும் லைப்ரரிக்கு கொடுத்து விடுவோம் என்று கூறியது அதைவிட மகிழ்வாக இருந்தது.


அந்தப் புத்தகக் கண்காட்சியில் ஒரு இடத்தில் புத்தகம் வாங்க முடியாத பொருளாதார நிலையில் இருக்கும் வாசிப்பை நேசிக்கும் நண்பர்களுக்கு ,குழந்தைகளுக்கு, புத்தகம் அன்பளிப்பாக அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்து ஒரு பெட்டியை வைத்திருந்தார்கள். நான் கூறிய இந்த இரு சகோதரிகளும் தன் அம்மாவிடம் கேட்டு நாலைந்து புத்தகங்கள் வாங்கி அந்த பெட்டியில் கொண்டு போட்டுவிட்டு வந்தது பார்க்க இன்னும் மகிழ்வை உண்டாக்கியது .


வாசிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகளிடம் ..பிறரை நேசிக்கும் பழக்கமும் வந்திருப்பது வியப்பில்லை தானே ..எனவே நான் பெற்றோர் முன்வைக்கும் சிறு வேண்டுகோள் குழந்தைகளுக்கு வாசிப்பனுபவத்தை பழக்குங்கள் என்பதே ...நல்ல புத்தகங்கள் மூலம் அவர்கள் புதிய உலகை காணட்டும் ..


தி.வள்ளி.

திருநெல்வேலி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%