உத்ரா,
தஞ்சாவூர்-2
சங்கரனுடன் பழகத் தொடங்கிய காலந்தொட்டே பார்த்துவருகிறார் குமரன். அவரால் இனியும் பொறுக்கமுடியாது என்று தோனியது.
அம்பிகா துணிக்கடையில் வைத்துதான் சங்கரனுடன் பழக்கம். குமரனைவிட பத்து வயது அதிகம் சங்கரனுக்கு. இவருக்கு அறுபது சங்கரனுக்கு எழுபது முடிந்துவிட்டது.
இன்று காத்திருந்தார் குமரன். இதற்கு ஒரு முடிவு கட்டிவிடவேண்டும் என்று.
கடையில் கூட்டம் குறைந்த நேரத்தில் கடைக்குள் போனார்.
வாங்க குமரன் சார் என்றார் அம்பிகா துணிக்கடையின் உரிமையாளர் உலகநாதன்.
சார்.. உங்ககிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்.. என்றார் குமரன்.
பேசலாம் வாங்க.. என்றார். கல்லாவைவிட்டு எழுந்து கடைக்குப் பின்பக்கம் அழைத்துப்போனார். அங்கே ஏற்கெனவே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டார்கள்.
சொல்லுங்க சார்.. என்றார்.
உங்களுக்கு வயது என்ன உலகநாதன் சார் என்றார்?
ஐம்பது சார்.. ஏன் சார் கேக்கறீங்க? என்றார்.
நான் நேரடியாச் சொல்லிடறேன்.. உங்களை விட சங்கரனுக்கு வயது அதிகம். மூத்தவர். அதுவும் அரசு வேலையிலஇருந்து பணிநிறைவு பெற்றவர். ரொம்ப நல்ல மனிதர். ஆனா உங்கள மாதிரி பொருளாதாரத்தில் உயர்ந்தவர் இல்லை. உங்ககிட்ட வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். அது மட்டுமில்ல மாதாமாதம் பென்ஷன் வாங்கியவுடன் உங்க வட்டித்தொகையையும் சரியாக் கொடுத்துடறார்..
இதெல்லாம் எதுக்கு சார்.. இப்போ சொல்றீங்க? என்றார் உலகநாதன்.
இருங்க அவசரப்படாதீங்க.. நான் சொல்லி முடிச்சுடறேன்.. உங்க கிட்டப் பணம் வாங்கினாதால சங்கரன் சார் உங்க அடிமை இல்லை சார்.. நீங்க செய்யவேண்டிய வேலையை எல்லாம் அவர்கிட்ட வயசைக் கூடப் பார்க்காம வாங்கறீங்க.. உங்களுக்குப் பிடிச்சத போய் புதிய பேருந்துநிலையத்துக்குப் போய் வாங்கிட்டு வர்றாரு.. பக்கத்துக் கடைக்குப் பணம் கொடுக்கறதுன்னா.. அவர் கிட்டக் கொடுத்தனுப்புறீங்க.. உங்களுக்குச் சாப்பாடு வாங்கிட்டு வந்து தர்றாரு.. சின்னச் சின்ன வேலையைக்கூட உங்களால செய்யமுடிஞ்சும்.. உக்காந்துகிட்டு அவர்கிட்ட வேலை வாங்கறீங்க? இது என்ன சார்? உங்க தகப்பனா இருந்தா இப்படி வேலை வாங்குவீங்களா? அவரு படிச்சவரு சார்.. உங்ககிட்டப் பணம் வாங்குனதுதான் தப்பு.. சும்மாவும் நீங்க கொடுக்கலே.. வட்டிக்குத்தான் கொடுக்கறீங்க.. நம்மால முடியலேன்னா அடுத்தவங்ககிட்ட உதவி கேக்கலாம்சார்.. ஆனா நம்மால முடிஞ்சும்.. நாம செய்யாம.. அதுவும் நம்டைவிட வயசுல மூத்தவர்கிட்ட கொஞ்சங்கூட அச்சப்படாம வேலை வாங்கறீங்க.. தொட்டதுக்கெல்லாம் அவர ஓடுபிள்ளை மாதிரி பயன்படுத்தறீங்க.. பாவம் இல்லையா? நீங்க வட்டிக்குப் பணம் கொடுக்கறவங்க.. கணக்கு நல்லாப் பாப்பீங்க.. ஆனா உங்கக் கணக்கு கழித்தல் கணக்கு சார்.. மேல இருக்கான் பாருங்க.. அவன் போடுறது கூட்டல் கணக்கு.. பாத்துக்கங்க.. ரொம்பப் பாவத்தச் சேத்துக்காதீங்க சார்.. அவர் கேட்கச்சொல்லலே.. ஆனா என்னாலக் கேட்காம இருக்கமுடியலே.. நான் வரேன் சார்..
என்றபடி விருட்டென்று எழுந்து வெளியே நடந்தார் குமரன்.
உலகநாதனுக்குள் ஏதோ மாற்றம் நிகழத்தொடங்கியது. அமைதியாக எழுந்து கல்லாவிற்குத் திரும்பினார்.